ட்ரீடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.பி.புரொடக்ஷன்ஸ் அம்பலவானன் – பிரேமா தயாரிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார், அபர்ணிதி, அனுஸ்ரீ. பாவா லட்சுணன்,, கயல் தேவராஜ், அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேன்.’
குறிஞ்சிகுடி மலைக்கிராமத்தில் இயற்கையான காற்று, தண்ணீர் என இயற்கையோடு இணைந்து வாழும் அந்த அழகிய கிராமத்தில் தேன் எடுக்கும் வாலிபனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. நிச்சயதார்த்தம் தடைபட்டாலும் மனதுக்கு பிடித்தவுடன் தாலி கட்டிக்கொண்டு வாழ்கிறாள் திடீரென்று வயிற்று வலி அவளைபடுத்தி எடுக்கிறது. அதற்கு சிகிச்சை பெற அரசாங்க மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் செல்கிறான் கணவன் அங்கே மருத்துவச் செலவிற்காக அல்லல்படும் கணவன் (வேலு) காப்பீடு அட்டை, ஆதார் அட்டை என்று அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு, லஞ்சமே பிரதானமாக இருப்பதால் பல சிரமங்களைக் கடந்து ஆதாரங்களை பெறுகிறார். இறுதியில் அங்கு சிகிச்சை கிடைத்ததா? அவள் உயிர் பிழைத்தாளா ? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்
இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மனதில் இடம் பிடித்துக்கொள்ளும் கதாபாத்திரங்களாக மாறி இருக்கின்றனர். குறிப்பாக கதாநாயகன் தருண்குமார் தேன் எடுக்கும் நேர்த்தி, மற்றவர்களுக்கு உதவும் பண்பு, தன்னை நம்பி வந்த காதலியை மனைவியாக கைப்பிடித்து உயிராக பார்த்துக்கொள்வது, மலைக்கிராமத்தை நேசிக்கும் வாழ்க்கை, வாய் பேச முடியாத மகளின் மீது பாசம், மனைவியை காப்பாற்ற பரிதவிக்கும் இடங்கள், இறுதியில் கையில் பணம் இல்லாமல் மனைவியின் உடலை சுமந்து கொண்டு மலைக்குச் செல்லும் சோகம், ஆதரவற்ற தனக்கு ஆதாரங்கள் எதற்கு என்று முடிவெடுக்கும் விதம் என்று படம் முழுக்க வேலுவாக வாழ்ந்திருக்கிறார்
கதாநாயகி அபர்ணதி மலைகிராமத்துப் பெண் பூங்கொடியாக படத்தில் நேர்த்தியான, அமைதியான, குறும்பான நடிப்பு மட்டுமல்ல துன்பத்திலும், சோகத்திலும் தன் நடிப்பால் மணம் வீசுகிறார், மனதை பதைபதைக்க வைக்கிறார். குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீக்கு ஸ்பெஷல் பாராட்டு!
பாவா லட்சுமணனின் அரசியல் பேச்சில் எதிரொலிக்கும் கேலியும் கிண்டலும் கலகலப்பு. சுகுமாரின் ஒளிப்பதிவு மலையையும் அருவியையும் கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது
கார்ப்பரெட் கம்பெனிகள் மலைப்பிரதேசங்களை ஆக்ரமித்து தொழிற்சாலைகளை கட்ட மலைக்கிராமத்து மக்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சிகளை பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தின் திரைக்கதை அதையொட்டி இருந்தாலும், இந்த கம்பெனிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தண்ணீர் மாசுப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளாகும் சாதாரண இளைஞனின் வாழ்க்கை சின்னாபின்னமாவதை அழுத்தமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயகன்.
மொத்தத்தில் ‘தேன்’ கொட்டும் தேனீ யின் வலி
நடிப்பு: தருண்குமார், அபர்ணிதி, அனுஸ்ரீ. பாவா லட்சுணன்,
இசை: சனத் பரத்வாஜ்
ஒளிப்பதிவு: எம்.சுகுமார்
தயாரிப்பு: ட்ரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன், அம்பலவாணன், பிரேமா
இயக்கம்: கணேஷ் விநாயகன்
மக்கள் தொடர்பு : நிகில்முருகன்
Leave a Reply