இண்டஸ் கிரியேஷன்ஸ் சார்பில் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, பூஜா தேவாரியா, தேவ், பெய்ஜ் ஹெண்டர்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் `வெள்ளைப்பூக்கள்’

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி விவேக் காதல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட மகன் அஜய்யை பார்க்க அமெரிக்காவுக்கு செல்கிறார். மகன் வெளிநாட்டுப் பெண்ணை மணம் முடித்திருந்ததால் ஆரம்பத்தில் பேச மறுக்கும் விவேக் மகனிடம் சமாதானம் ஆகிறார். ஆனாலும் மருமகளிடம் பேசாமல் விலகுகிறார். அஜய், அவருடைய மனைவி, பக்கத்து வீட்டில் உள்ள சார்லி, அவருடைய மகள் பூஜா தேவாரியா ஆகியோர்களுடன் பொழுதை போக்கி வரும் நிலையில் விவேக் வீடு உள்ள பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் திடீரென கடத்தப்படுகின்றனர்.

முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் சார்லியுடன் சேர்ந்து கடத்தல்காரன் யார் என்பதை விவேக் துப்பறிகிறார். இந்த நிலையில் தான் எதிர்பாராத வகையில் திடீரென விவேக் மகன் அஜய்யும் கடத்தப்படுகிறார். இதனையடுத்து இந்த வழக்கில் தீவிரமாக இறங்கும் விவேக், மகனை கண்டுபிடித்தாரா? கடத்தல்காரன் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

காவல் அதிகாரியாக விவேக் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மனசாட்சிக்குள் புகுந்து அவர் விசாரணை நடத்தும் விதம் நல்ல ரசனை. மகன் கடத்தப்பட்ட பின்பு தந்தையாக அவர் உருகி அழுகும் காட்சிகளில் நமக்கும் கண்ணீர் வந்துவிடுகிறது. படத்தின் இறுதியில் விவேக் மற்றும் குழுவினர் சொல்ல வரும் ஒற்றைக் கருத்திற்கே மொத்த பூங்கொத்தையும் கொடுக்கலாம். மகனாக தேவ் நல்ல அறிமுகம். தேவை உணர்ந்து நடித்திருக்கிறார்.

நண்பராக சார்லி நீண்ட நாட்களுக்குப் பிறகு விவேக் , சார்லி இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இயல்பான நடிப்பில் மனதில் நிறைகிறார் சார்லி. விவேக்கின் மருமகளாக பெய்ஜ் ஹேண்டர்ஸன் அசத்தலான நடிப்பு. பக்கத்து வீட்டுக்காரராக வரும் பாகிஸ்தானி , கொடூர தந்தை என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிறைகிறார்கள்.

ஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவு நம்மை சியாட்டிலின் கொள்ளை அழகை கண்ணுக்குள் நிறுத்துகிறது. சுற்றுலா போன அனுபவம்.

முதலில் படத்தை தயாரித்த சியாட்டில் தமிழர்களுக்கு வாழ்த்துகளை சொல்லிக்கொள்வோம். தமிழகத்தின் கமர்ஷியல் மசாலாவை கலந்து விடாமல் சியாட்டிலையும் மறக்காமல் படம் எடுத்திருப்பதற்கு நன்றி. உலக அளவில் வளர்ந்திருக்கும் சிறுமிகள் பாலியல் வன்முறையை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன்.

Leave a Reply

Your email address will not be published.