விஐடி வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு அமெரிக்கா நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்ட்டது. அது குறித்து தமிழியக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
“இந்த கெளரவ டாக்டர் பட்டம்” வழங்கிய நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்திற்கும்வின்கேப்டன் பல்கலைக்கழகத்திற்கும்பின்கேப்டன் பல்கலைக்கழகத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அவர்கள் ஒராண்டு காலம் எடுத்துக் கொண்டார்கள். காரணம், அது அரசு பல்கலைக்கழகம், அவர்களுக்கு பல்வேறு நியதிகள் இருக்கிறது. எனக்கு கடிதம் வந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது 2024 ஆம் ஆண்டு மே மாதம். இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பேராசிரியர் ஸ்ரீஹரிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்விப் பணியை அவர்கள் மதிக்கிறார்கள், என்று தான் நான் கருதுகிறேன். உலகெங்கும் கல்வி பரவ வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், அதை ஆதரிக்கிறார்கள். உயர் கல்வியில் பின் தங்கிய நாடு, நம் நாடு. வளர்ந்த நாடுகளில் அது 60 அதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கிறது. புதிய கல்விக்கொள்கையில், 50 சதவீதமாக வளர வேண்டும் என்று அரசு சொல்லியிருக்கிறது. ஒரு மாநிலம் மட்டுமே உயர் கல்வியில் 50 சதவீதத்தை எட்டியிருக்கிறது. இதற்கு அரசு ஒரு காரணமாக இருந்தாலும், பெற்றோர்கள் தான் முழுமையான காரணம். நாம் கல்விக்கு அதிகமாக செலவழிப்பதில்லை. மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி, கல்விக்கு உரிய இடத்தை கொடுத்து அதற்காக அதிகம் செலவழிப்பதில்லை. இந்த வரவு, செலவு பற்றிய மத்திய அரசின் பட்ஜெட் 47 லட்சம் கோடி, அதில் கல்விக்காக ஒரு லட்சம் கோடி தான் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக மொத்த வருவாயில் 6 சதவீதத்தை கல்விக்காக செலவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் இன்னும் 3 சதவீதத்தை தாண்டவில்லை. கிட்டதட்ட, அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.
உலகத்தில் கல்விக்கு செலவிடும் நாடுகளுக்காக ரேங்க் போடுகிறார்கள். உலகளவில் 180 நாடுகளில் நாம் 155 வது இடத்தில் இருக்கிறோம். ஆக, அந்த அளவுக்கு நாம் அதில் பின் தங்கியிருக்கிறோம். கல்வி வளர்ந்தால் தான், உயர் கல்வியால் வீடும், நாடும் வளரும். இதை நாம் இங்கு பார்க்கிறோம். வி.ஐ.டி-யில் இருக்க கூடிய ஸ்டார் திட்டத்தின் மூலம், கிராமங்களில் இருக்க கூடிய மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக கொடுக்கிறோம். அவர்கள் படிப்பை முடித்து போகும் போது வேலையும் வாங்கி கொடுக்கிறோம். அப்போது அவர்கள் வேலையில் வாங்கும் சம்பளத்தை பேராசிரியர்கள் மூலம் நான் அறிவேன். அப்போது அவர்கள், அவர்களுடைய தந்தை வாங்கும் சம்பளத்தை விட பத்து முதல் இருபது சதவீதம் அதிகமாக வாங்குகிறார்கள், முதல் மாதத்திலேயே. அது மாதிரி நாடு முழுவதும் செய்ய முடியும். வறுமை மற்றும் ஏழ்மையை விரட்ட கல்வியால் மட்டுமே முடியும். இலவசங்கள் ஓரளவு தான் கைகொடுக்கும், முழுமையாக முன்னேற வேண்டும் என்றால் அது கல்வியால் மட்டுமே முடியும். நம் முதல்வர் அவர்கள் தற்போது உயர் கல்விக்கு செல்லகூடிய மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த திட்டத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிகளில் படிக்கும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இலவசமாகவோ அல்லது வட்டி இல்லா கடன் பெற்று கொடுக்கும் விதத்திலாவது இதை செய்ய வேண்டும், என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போது நாம் பெற்றிருக்கிற ஐம்பது சதவீதம் போதாது, உயர் கல்வியில் நாம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். ஜெர்மனி 75 சதவீதத்திலும், அமெரிக்கா 85 சதவீதத்தில் இருக்கிறது. தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா 100 சதவீதம் முன்னேற்றம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள். அந்த கல்வி உயர்ந்தால் தான் பொருளாதாரம் உயரும். நாம் ஓரளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை நான் மறுக்கவில்லை. உலகளவில் பொருளாதாரத்தில் நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால், தனிநபர் வருமானம் என்று பார்த்தால் நாம் 140 இடத்தில் இருக்கிறோம். இதற்கு காரணம், கல்வியை போதுமான அளவுக்கு நாம் கொடுக்காதது தான். ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருப்பதற்கும் இது தான் காரணம். ஏற்கனவே சமூகத்தில் சாதிகள் மூலம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. நம் நாட்டில் 25 ஆயிரம் சாதிகள் இருக்கின்றன. இவற்றை இல்லாமல் செய்ய முடியுமா? என்று தெரியாது. ஆனால், கல்வியால் இவற்றை குறைக்க முடியும். சாதி மறுப்பு திருமணங்கள் பெரும்பாலும் படித்தவர்கள் தான் செய்கிறார்கள். அவர்கள் தான் சாதி மற்றும் மதங்கள் பற்றி கவலைப்படுவதில்லை. அதேபோல், பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ள நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இதை யாரும் பெரிதாக பேசுவதில்லை, ஒரு சிலர் மட்டும் தான் பேசுகிறார்கள். மேலே, இருக்கும் பத்து சதவீதம் பேர் 80 சதவீத சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் நாம் அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளி விட்டோம். அங்கு மேலே இருக்கிற ஒரு சதவீதம் பேர் 35 சதவீத சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இங்கு மேலே இருக்கும் ஒரு சதவீதம் பேர் 55 சதவீத சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இது சரியல்ல, இது நம்மை மிகப்பெரிய அழிவுக்கு கொண்டு சென்றுவிடும். இதை அரசு மாற்ற வேண்டும். அவர்கள் செய்ய முடியவில்லை என்றால் கல்வி இதை நிச்சயம் மாற்றும்.
Leave a Reply