ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது.

ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசரடித்து வரும் சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். ஆம்.. முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கலங்கடித்த துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் ‘பேட்ட’ என்ற பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தவர், இப்போது சீயானுடன் இணைந்து அடுத்த வெற்றியைக் கொடுக்க களமிறங்குகிறார். ‘பீட்சா’ தொடங்கி தற்போது முடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வரை ஒவ்வொரு படமுமே வித்தியாசமான கதைகளங்கள் உடையவை தான். அந்த வகையில் ‘சீயான் 60’ படமும் வித்தியாசமான கதைகளமாகவும், ரசிகர்களுக்கு விருந்தாகவும் இருக்கும் என நம்பலாம்.

விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் – துருவ் விக்ரம் என்ற இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற இணைந்துள்ளார் அனிருத். தமிழ்த் திரையுலகில் தற்போது தன் பாடலால் இளைஞர்களை உற்சமாக்கி வரும் அனிருத் இந்தக் கூட்டணியில் இணைந்திருப்பது, படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சீயான் 60’ படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இவருடைய வெளியீட்டில் ‘மாஸ்டர்’ தயாராகி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சீயான் 60’ படத்தை தயாரிக்கவுள்ளார். ஒரு நிறுவனத்தின் படங்களின் வரிசையைப் பார்த்தாலே, அந்நிறுவனத்தின் வளர்ச்சியைக் கூறிவிடலாம். அப்படி தரமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான வளர்ந்து வருகிறது.

‘சீயான்60’ 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.