ஒவ்வொரு படத்திலுமே படத்தின் கதையோட்டத்தை பிரதிபலி க்கும் வகையில் சில பாடல்கள் அமையும். அந்தப் பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்த்துக் கொள்ள இயலும். அப்படி ‘கணம்’ படத்தில் ‘அம்மா’ பாடல் அமைந்திருப்பது சிறப்பம்சம்.

வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’.அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் சர்வானந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கணம்’.

‘அம்மா’ பாடலில் உமா தேவியின் வரிகளுக்கு, ஜேக்ஸ் பிஜாய் தனது இசையின் மூலம் உயிரோட்டி இருக்கிறார். சித் ஸ்ரீராம் தனது குரல் மூலம் கேட்பவர்களை மயக்கியுள்ளார்.இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..,

“அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன்.
3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம்.

இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது.

தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சிரிவெண்ணெலா அவர்கள் எழுதிய கடைசி பாடல்களில் ஒன்று இது. முதலில் நாங்கள் தெலுங்கு மொழியில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை.

பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம். ‘மன்னன்’ படத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத…’ ,வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற சில பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும். தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.

இரு மொழிகளில் உருவாகி வரும் ‘கணம்’ – ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அம்மா.. பாடல். ஹிட் ஆன ‘கணம்’ படத்தின் ஆன்மாவான ‘அம்மா’ பாடல்!

Leave a Reply

Your email address will not be published.