ஸ்ரீ அங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் சீனிவாசன், காயத்ரி ரீமா, பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சுந்தரவடிவேல் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ரீ ‘. ஒரு சைக்கோ திரில்லராக உருவாக்கி இருக்கும் இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குநர் பேரரசு பேசும்போது,
“ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவில் சில வார்த்தைகள் பேசப்படும்.கறுப்பு வெள்ளை படங்கள் வந்தபோது அபூர்வமாக கலர் படங்கள் வந்தன. அப்படி வரும் போது போஸ்டர்களில் ஈஸ்ட்மேன் கலர் திரைப்படம் என்று போடுவார்கள். பிறகு சினிமாஸ்கோப் வந்தது .பல படங்களில் ஏதாவது ஒன்றுதான் சினிமாஸ் கோப்பாக இருக்கும். அப்போது இது சினிமா ஸ்கோப் படம் என்று போடுவார்கள். அது போல இன்று ‘தியேட்டர் ஆடியன்ஸ்’ என்ற வார்த்தை சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை சினிமாவுக்கு ஒரு சாபம்.
சினிமா எடுப்பதே தியேட்டர்களுக்கு வருவதற்குத் தானே? அது என்ன தியேட்டர் ஆடியன்ஸ்?அவர்கள் கோணத்தில் அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு சினிமா மீது ஆர்வம் உள்ள சினிமாவை நம்பி இருக்கும் என் போன்றவர்களுக்கு அது அவலமாகத் தெரிகிறது. வருத்தப்பட வைக்கிறது.
இன்று மக்கள் திரையரங்கிற்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். சின்ன படங்கள் ஓடுவதில்லை. சிறிய படங்களுக்கு, சிறிய முதலீட்டு படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்லை.கேட்டால் மக்கள் வரவில்லை என்கிறார்கள். பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.
இந்த சினிமாவை காப்பாற்றுபவர்கள், பெரிய ஹீரோக்களும் பேய்களும் தான் தான் என்று சொல்லத் தோன்றுகிறது.இன்று பெரிய ஹீரோக்களுக்கும் பேய்களுக்கும் தான் சினிமாவில் மதிப்பு இருக்கிறது.
இன்று மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை.கமல், ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தால் வருகிறார்கள். அல்லது பாகுபலி,கேஜிஎப் போன்ற பிரம்மாண்டமான பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் என்றால் வருகிறார்கள்.சிறிய படங்களுக்கு வருவதில்லை.
அதிலும் ஒரு சின்ன ஆறுதல். சிறிய படங்களில் பேய்ப் படங்கள் ஓடுகின்றன. அதற்கு மட்டும் திரையரங்குகள் கிடைக்கின்றன. இப்படியான பேய்ப் படங்களுக்கு பிற மொழிகளில் விற்பனை மதிப்பு இருக்கிறது.
அந்த வகையில் இந்த ‘ரீ ‘படம் ஒரு பேய்ப் படமாக உருவாக்கி இருக்கிறது. இப்படி இன்றைய சூழலையும் மக்களின் உணர்வையும் புரிந்து கொண்ட அந்த ஒரு நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை சுந்தரவடிவேல் எடுத்துள்ளார்.
நம் நாட்டில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தெருவுக்கு ஒன்று இருந்த இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன.ஆனால் திரையரங்குகள் குறைந்து கொண்டே வருகின்றன. நான்கு இருந்த இடத்தில் இரண்டுதான் இருக்கின்றன .என்ன காரணம்? இரண்டின் மூலமும் அரசாங்கத்துக்கு வருமானம்தானே வருகிறது?
திரையரங்கில் இருந்து கேன்டீனில் அடிக்கப்படும் கொள்ளையை அரசு தடுத்தால் சினிமா மூலம் அரசுக்கு வரும் வருவாயும் பெருகும். அப்படிச் செய்தால் தான் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள்.






Leave a Reply