ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜீன் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படவெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது…
பொம்மை ஜீன் 16ஆம் தேதி வருகிறது. நிறைய ஆசைப்பட்டு செய்த படம். மனதுக்கு நெருக்கமான படம். இது ராதா மோகன் சாரின் படம் அவ்வளவுதான். ஒவ்வொரு காட்சியிலும் அவர் வைக்கும் உயிரோட்டம் அப்படியே தெரிந்தது. அவர் சொல்லித் தந்ததைச் செய்தாலே போதும். ஒரு நல்ல மனிதராக அவருடன் பழகியது சந்தோஷமான அனுபவம். SJ சூர்யா சாருடன் இரண்டாவது படம், இதில் தயாரிப்பாளராகவும் இருந்தார். ஒரு பக்கம் நெருப்பாக இருப்பார் இன்னொரு பக்கம் கூலாக நடிப்பார். ஒவ்வொரு டேக்கிலும் வித்தியாசமாகத் தரப் போராடுவார். எனக்கு நந்தினி கேரக்டர் தந்ததற்கு ராதா மோகன் சாருக்கு நன்றி. படம் கண்டிப்பாக நல்ல படைப்பாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…
பத்திரிக்கையாளர் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தை வெளியிட முடிவு செய்தேன், நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் காதல் கதையே வித்தியாசமாக இருக்கும். இயக்குநர் ராதா மோகன் சாருக்கு தான் அந்த பெருமை சேரும். பிரியா பவானி சங்கர் படத்தில் பொம்மையாக நடித்துள்ளார், ஆனால் நிஜத்தில் அவர் பார்ப்பதற்கும் பொம்மை தான் அவ்வளவு அழகு. சாந்தினி ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரமும் சிறப்பாக வந்துள்ளது. யுவன் சாரின் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. படப்பிடிப்பின் பாதியிலேயே கொரானா வந்துவிட்டது, ஆனாலும் அது படத்திற்கு உதவியாகத்தான் இருந்தது. படத்தின் பின்னணி இசைக்காகவே படத்தைப் பார்க்கலாம் நான் அதற்கு உறுதி அளிக்கிறேன். இயக்குநர் ராதா மோகன் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார், இந்த படத்தின் காட்சிகள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன், இந்த படம் உணர்வுகளின் அடிப்படையில் உருவான படம், இந்தப் படத்தை மக்களிடம் கொடுத்து விடுகிறேன், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி..
Leave a Reply