விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ஐ லியோனி பேசும் போது, “நடிப்புக்கான பயிற்சி அளிக்கும் கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற நாடகங்களை நடத்தி, இதற்காக பயிற்சி பெறுபவர்கள் தான் மிக சிறந்த நடிகர்களாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்ட நாள் கழித்து மேடையில் இவர்களுடன் அமர்ந்து இருக்கிறேன். பாரதி கண்ணமா தொடங்கி, திரையுலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கி வெற்றிக் கொடிக் கட்டிய என் அருமை சகோதரர் சேரன். அவர் எப்பவும் இதேபோல் எளிமையாக தான் இருப்பார். சில இயக்குநர்களை பார்த்தால், கூடவே ஒரு உதவியாளரை வைத்துக் கொள்வார்கள். புகழின் உச்சத்தில் இருந்த போதும், தற்போது அதைவிட பெரிய இடத்தில் இருக்கும் போதும் ஒரே மாதிரி இருக்கக்கூடிய அற்புதமான இயக்குநர். அவருடன் இன்று இங்கு இருந்தது எனக்கு மகிழ்ச்சி.”

“இதேபோல் எனது அருமை சகோதரர் சமுத்திரக்கனி, இன்றைய உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சிக்கு எளிமையாக வந்து நம்முடன் அமர்ந்து இருப்பது பெரிய அதிசயம் தான். சுப்ரமணியபுரம் தொடங்கி ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.”

“அவரும், தம்பி ராமையும் உருவாக்கிய சினிமா விநோதய சித்தம். அந்த படத்தை நான் பிரீவியூ பார்த்தேன். அந்த படம் என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேடை நாடகத்தை படமாக்கியது தான் விநோதய சித்தம். அந்த படத்தின் கதை ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி தான் இந்த உலகம் பேசும் என்று எல்லாரும் நினைப்போம். அந்த படத்தில் உயிரிழந்த பிறகு தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை பார்க்க தம்பி ராமையா வருவார். அப்போது ஒருத்தர் கூட அவரை பற்றி சிந்திக்க மாட்டார்கள்.”

“மனிதன் உயிரோடு இருக்கும் வரை தான் அவனுக்கு வாழ்க்கை. இறந்த பிறகு அவன் எப்படி இருக்கிறான் என்பது அவனுக்கும் தெரியாது. அவனோடு வாழ்பவருக்கும் தெரியாது என்ற கதையை சொல்லியிருந்தார்கள். அந்த படத்தில் என் அருமை தம்பி சமுத்திரகனி அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தம்பி சௌந்தரராஜா வந்திருக்கிறார். தேவியை பார்க்கும் போது என்னை போன்ற வாத்தியார்கள் தான் நினைவுக்கு வருகின்றனர்.”

இயக்குநர் சேரன் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் எளிமையாக இருக்கிறார் – திண்டுக்கல் ஐ லியோனி

Leave a Reply

Your email address will not be published.