திறமையான கலைஞர்களை அரவணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை தமிழ் திரையுலகம் தவறாமல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகை ரோஸ்மினும் விரைவில் இணையவுள்ளார். நடிகர் திலீப்பின் ‘பவி கேர் டேக்கர்’ திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பிற்காக மலையாள ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் ரோஸ்மின்.
அவர் இப்போது இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரோஸ்மின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகை ரோஸ்மின் தனது முதல் தமிழ் திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்டதாவது, “சில அனுபவங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. என்னுடைய கரியரில் முக்கியமான கட்டத்தில் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். கோலிவுட்டில் எனது பயணத்தைத் தொடங்கி வைக்கும்படியான இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாது நிறைய புது விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்” என்றார்.
கோலிவுட்டில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, “நான் சினிமாவை நேசிப்பவள். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை உள்ளது. அது எனக்கு இன்ஸ்பிரேஷன்” என்றார்.
கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ள ரோஸ்மின் மாடலிங் துறையிலும் தடம் பதித்தார். அங்கிருந்து நடிப்புத் துறையில் நுழைந்தார்.
அவர் ஏற்கனவே ‘மிஸ் மலபார் 2022’ பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து மிஸ் குயின் கேரளா 2023 இல் முதல் இடம் மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2023 இல் இரண்டாவது இடமும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply