ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல்கல் என்று சொல்லும் விதமாக ஒரு படம் நிச்சயம் அமைந்துவிடும். அப்படி மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மகுடம் சூட்டும் படமாக வெளியான படம் தான் ‘கேப்டன் பிரபாகரன்’.
கேப்டன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக அமைந்த படம் தான் கேப்டன் பிரபாகரன். பெரும்பாலான ஹீரோக்களுக்கு அவர்களது நூறாவது படம் வெற்றியை கொடுக்க தவறியபோது கேப்டன் விஜயகாந்த்திற்கு மட்டும் நூறாவது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் பெற்றுக் கொடுத்தது. அது மட்டுமல்ல, காலத்திற்கும் நிலைக்கும் விதமாக கேப்டன் என்கிற அடைமொழியையும் சேர்த்து அவருக்கு பரிசளித்தது கேப்டன் பிரபாகரன். இந்தப்படம் கொடுத்த வெற்றியின் ஞாபகார்த்தமாக தான் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார் விஜயகாந்த்.
இத்தனை பெருமை வாய்ந்த திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதை கொண்டாடும் விதமாக விரைவில் மிகப்பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. பிலிம் விஷன் கம்பெனியின் ராமு படத்தினை 4K தரத்திலும் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து கொடுத்துள்ளார்.
4K தரத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் ‘கேப்டன் பிரபாகரன்’ விரைவில் தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்.
1991 ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ரிலீஸாக இந்த படம் வெளியானது IV சினி புரடக்சன்ஸ் சார்பில் அ.செ. இப்ராஹிம் ராவுத்தர் இந்த படத்தை தயாரித்தார். கேப்டன் விஜயகாந்த்துக்கு புலன் விசாரணை என்கிற சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த கையோடு தனது இரண்டாவது படமாக, கேப்டனின் 100வது படமாக இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கினார் இயக்குநர் ஆர்.கே செல்வமணி. பிரமாண்டம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என படமாக மட்டும் எடுக்காமல், அவருக்கு பின்வந்த படைப்பாளிகளுக்கு இந்தப்படம் மூலம் ஒரு பாடமே எடுத்திருந்திருந்தார் இயக்குநர் ஆர்கே.செல்வமணி..
ஒரு படத்திற்கு எல்லாமும் சரியாக அமைந்து விடும் என்பது போல இந்த படத்திற்கு இசைக்கு இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு ராஜராஜன், வசனங்களுக்கு லியாகத் அலிகான், வில்லனாக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெறும் விதமாக சரத்குமார், அறிமுக மிரட்டல் வில்லனாக வீரபத்ரன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் என பலரும் பக்கபலமாக அமைந்ததுடன் இந்தப்படம் மூலம் தங்களது திரையுலக பயணத்தில் திருப்புமுனை பெற்றவர்கள் பலர்.
அந்த வகையில் ஆந்திராவுக்கு இப்போது ஒரு ‘புஷ்பா’ என்றால் தமிழ்நாட்டுக்கு அப்போதே ஒரு ‘கேப்டன் பிரபாகரன்’ என அடித்து கூறலாம்..

Leave a Reply