‘6’ ,’கிக்’, ‘கேம்’ போன்ற படங்கள் அப்படி அமைந்து இருக்கின்றன.
தமிழில் ‘சிக்ஸ்’ ஷாம், தெலுங்கில் ‘கிக்’ ஷாம், கன்னடத்தில் ‘கேம்’ ஷாம் என்று அறியப்படும் ஷாம், இப்போது மும்மொழி நடிகராகி, தென்னிந்திய நடிகராகி விட்டார்.
தமிழில் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வெளியாகத் தயாராகவுள்ளது. அண்மையில் ஷாமுடன் பேசிய போது…!
உங்களுக்கு ஏன் அவ்வப்போது இடைவெளி வந்து விடுகிறது..?
நான் நடித்துத் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் ‘புறம்போக்கு’ .அந்தப் படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இயக்கிய ஜனாசாருக்கு நன்றி. இப்போதும் என்னை யாராவது எங்கு பார்த்தாலும் ‘6’ படம் பற்றிப் பேசும்போது எனக்கு மகிழ்ச்சியாக மட்டுமல்ல ஆச்சரியமாகவும் இருக்கும்.அந்த அளவுக்கு அது எல்லாரையும் பாதித்துள்ளது.
ஏன் இடைவெளி என்கிற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. நான் எப்போதும் தேர்ந்தெடுத்தே படங்களை ஒப்புக் கொள்கிறேன். எப்போதும் எண்ணிக்கையில் எனக்கு விருப்பமில்லை.
‘புறம்போக்கு’ படத்துக்குப் பிறகு நான் ‘ஒரு மெல்லிய கோடு’முடித்தேன். பிறகு கன்னடம் தெலுங்கு என்று போய் விட்டேன்.
‘ஒரு மெல்லிய கோடு’ படம் கன்னடத்தில் ‘கேம்’ என்கிற பெயரில் உருவானது. அங்கே பிப்ரவரி 26-ல் வெளியானது. கன்னடத்தில் இது எனக்கு இரண்டாவது படம்.அது அங்கே வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது அங்கே என்னை ‘கேம்’ ‘ஷாம் என்கிறார்கள்.
‘ஒரு மெல்லிய கோடு’ பட அனுபவம் எப்படி இருந்ததது?
‘ஒரு மெல்லிய கோடு’ படம் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது.இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஷ் இயக்கியிருக்கிறார்.அவர் எப்போதும் தனக்குக் கதைதான் முக்கியம் என்பவர்.ரமேஷ் எப்போதும் உண்மைக் கதையை பின்னணியாகக் கொண்டு படம் எடுப்பவர் அவரது முதல் படம் ‘சயனைடு’ பார்த்துவிட்டு நான் தொடர்பு கொண்டு பாராட்டினேன்.அவர் இயக்கத்தில் நடிக்க என் விருப்பத்தை வெளியிட்டிருந்தேன்.எனக்கான வாய்ப்பு வரும்போது அழைத்து கொடுத்திருக்கிறார்.
மூத்த நடிகர் அர்ஜுன்சார் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் என் மூத்த ககோதரர் போல் பழகினார்.
மனிஷா கொய்ராலாவுடன் நடித்த அனுபவம் எப்படி?
‘ஒரு மெல்லிய கோடு’படத்தில் நெகடிவ் நிழல் விழும் பாத்திரம் எனக்கு. இதில் இரண்டு ஜோடிகள் ஒருவர் மனிஷா கொய்ராலா, இன்னொருவர் அக்ஷாபட்.
ஷாமுக்கு மனிஷா ஜோடியா என்று எல்லாரும் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அந்தப் படம் பதில் சொல்லும்.
மனிஷா தமிழில் ‘பம்பாய்’ படம் மூலம் அறிமுகமானவர் ,ரசிகர்களால் வரவேற்கப்பட்டவர் . அடுத்து கமல்சாருடன் ‘இந்தியன்’, அர்ஜுன்சாருடன் ‘முதல்வன்’, ரஜினிசாருடன் ‘பாபா’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழைத் தவிர இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இப்படிஅவர் பெரிய பெரிய கதாநாயகர்களுடன் நடித்த பெரிய நட்சத்திரம். அனுபவசாலியும் கூட . ஆனாலும் தன்னுடன் யார் நடிக்கிறார்கள் என்பதைவிட கதையும் பாத்திரமும் பிடித்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
முதலில் அவருடன் நடிக்கும் போது எப்படி நடந்து கொள்வது,எப்படி எடுத்துக் கொள்வாரோ என எனக்குள் பதற்றம். குழப்பம். ஆனால் அவர், சகஜமாக்கி விட்டார். நான் நடித்த படங்கள் பற்றிக் கேட்டார். அதில் ‘6’ படத்தை எனக்காகப் பார்த்தார். பாராட்டினார்.அதில் என் தோற்றம் பற்றிக் கேட்டார். குறிப்பாகப் படத்தில் வரும் என் கண் வீக்கம் பற்றி விசாரித்தார்.எப்படி இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். நானும் மேக்கப் மேனும் கஷ்டப் பட்டுச் செய்ததுதான் அது என்றேன். அதைப் பற்றி ரொம்பவே ஆர்வமாக விசாரித்தார். பாராட்டவும் செய்தார். அவருடன் இப்படத்துக்காகப் பாங்காக்கில் பாடல் காட்சிகள் படமானது நல்ல அனுபவம்.
‘ஒரு மெல்லிய கோடு’ படப்பிடிப்பு அனுபவம் பற்றி நிறையவே சொல்லலாம் செட்டுக்குள் மனிஷா வந்து விட்டால் முதலில் மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுவார். மற்றவர்களையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிடச் சொல்வார். அந்த அளவுக்கு தொழில் பக்தி, நேர்மை, உண்மையாக இருப்பார். உடம்பை சரியாகக் கவனித்துக் கொள்வார். கேன்சர் பாதிப்பு வந்து மீண்டு வந்து இருக்கிறார். அதனால் தினசரி உடற்பயிற்சி, யோகா, தியானம் என்று கவனமாக இருப்பார். இதில் நடிக்கும் போது முதல் படத்தைப் போல கவனம். அக்கறை நிதானம் இருந்ததே தவிர ஏதோ சும்மா வந்துவிட்டோம் நடிப்போம் என்கிற அலட்சியம் இருந்தது இல்லை. மொழி தெரியா விட்டாலும் கூட தெரிந்தமாதிரி சிறப்பாக நடிப்பவர்.
படப்பிடிப்பில் அவர் நடந்து கொள்வது நடிப்பது எல்லாவற்றையுமே நான் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எல்லாமே பாடம் போல இருந்தது மறக்க முடியாது.
‘ஒரு மெல்லிய கோடு’ படத்தைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜா சார் இசையமைத்தது எனக்குப் பெருமையான விஷயம். படத்தில் பாடல்கள் மட்டுமல்ல பின்னணியும் சிறப்பாக அமைந்து இருக்கிறது.
வேறு மொழிகளில் என்ன படங்கள்?
தெலுங்கில் ‘கிக்’ படம் போல ‘ரேஸ்குர்ரம்’ படமும் எனக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது. இப்போது ஏ.எம்.ஏத்னம் தயாரிப்பில் அவர் மகன் ஜோதி கிருஷ்னணா இயக்கத்தில் ‘ஆக்சிஜன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன். என்னுடன் கோபிசந்த் நடிக்கிறார். படம் வித்தியாசமான கதை. எனக்கு ஜோடி இல்லை.
கன்னடத்தில் முன்பு ‘தனனம்’ படத்தில் தனியொரு நாயகனாக நடித்தேன். எனக்கு ரம்யா, ரக்ஷிதா என்று இரண்டு ஜோடிகள். நல்ல பெயர் பெற்றுத் தந்த படம் அது. இப்போது ‘கேம்’ வெளியாகியுள்ளது. பலரும் கேம் ஷாம் என்று கூப்பிடுகிறார்கள். தெலுங்கில்’ரேஸ் குர்ரம்’ மூலம் அல்லு அர்ஜுன் எனக்கு தம்பியாகி விட்டார் என்றால் கன்னடத்தில் சுதீப் எனக்கு கிடைத்து இருக்கும் அண்ணன் என்பேன். என் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர் அவரும் 3 மொழி நடிகராகவிட்டார். ‘கேம்’ பார்த்து விட்டு சுதீப் பாராட்டினார். அடுத்து.சுதீப்புடன் ஒரு படம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன்
மீண்டும் சொந்தப்படத் தயாரிப்பு உத்தேசம் உண்டா ?
நான் தயாரித்து நடித்த ‘6’ எனக்கு லாபத்தை விட நல்ல பெயரையும் பல பாடங்களையும் பெற்றுத்தந்தது. அந்தவகையில் அது எனக்கு லாபமே .அந்தப் படவிழாவில் பாலாசார் போஸ்டர் பார்த்து பாராட்டியவர் ,இதுமாதிரி கடினமாக உழைக்கிற ஆட்கள் கிடைப்பது அரிது. ஷாமை வைத்துக் கண்டிப்பாக நான் படம் செய்வேன் என்றார்.. இதெல்லாம் சாதாரண பாராட்டு இல்லை. இது ‘6’ படத்தில் நடித்திருக்காவிட்டால் கிடைத்து இருக்குமா?
இப்போது தமிழில் என் தயாரிப்பில் ‘காவியன்’ என்கிற படம் எடுக்க இருக்கிறோம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டில்தான் நடக்கும். அப்படித்தான் கதை அமைந்திருக்கிறது. சாரதி என்பவர் இயக்க இருக்கிறார்.இதைமூன்று மொழிகளில் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம்..
இப்போதைய புதியதலைமுறை கலைஞர்கள் பற்றி?
இப்போது நிறையபேர் வருகிறார்கள். தமிழில் ரசிகர்கள் புத்திசாலிகள் .வித்தியாசமானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறார்கள் ‘புறம் போக்கி’ல் நான் நடித்த ஒரு நெகட்டிவான மெக்காலே கேரக்டர் கூட பலருக்கும் பிடித்திருந்தது.
இப்போது வருகிற இளைஞர்கள் குறும்படம் மூலம் பலரும் திறமையோடு வருகிறார்கள். அவர்களில் பார்வை புதிதாக இருக்கிறது. நடிப்பிலும் படைப்பிலும் புதிய கலைஞர்கள் வரட்டும் மகிழ்ச்சியே.
Leave a Reply