ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா, சுசீலா ராமன், லால் ஜோசப் , சன்னி வேயினர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’

காஷ்மீரில் நடக்கும் போரில் பெற்றோரை இழக்கும் ஜிப்ஸி (ஜீவா) குதிரைக்காரர் ஒருவரால் வளர்க்கப்படுகிறார். ஒருக் கட்டத்தில் குதிரைக்காரர் இறந்துவிட குதிரையுடன் தனித்து விடப்படும் ஜீவா தமிழ்நாட்டின் நாகூருக்குச் செல்கிறார். அங்கு கட்டுப்பாடு மிக்க இஸ்லாமியக் குடும்பத்தில் வளரும் பெண்ணான வஹீதாவைக் (நடாஷா) கண்டதும் காதல் கொள்கிறார். நடாஷாவுக்கும் ஜீவா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. திருமணம் நிச்சயமான நடாஷா, ஜீவாவுடன் சேர்ந்து வீட்டை விட்டு செல்கிறார்.

இவரும் வட மாநிலம் ஒன்றுக்குச் சென்று திருமணம் செய்து கொள்கிறார்கள். எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடாஷாவுக்காக வீடு எடுத்து வசிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் ஏற்படும் மதக்கலவரம் அவர்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜீவாவுக்கு வித்தியாசமான பாத்திரம். அதை தன் நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கிறார். புதுமுகமாக வரும் நடாஷா, ஒரு நல்ல அறிமுகம். ஒரு முஸ்லிம் பெண்போலவே அழகாகவும் அர்த்தப்படுத்தும் வகையிலும் நடித்திருக்கிறார். அவரது தந்தையாக வரும் மலையாள இயக்குநர் லால் ஜோஷ், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கேரள கம்யூனிஸ்டாக சன்னி வேய்ன், கலவரத்தை நடத்தும் வன்முறையாளராக விக்ராந்த் சிங் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே, இந்தியாவின் அழகோடு, இந்தியாவின் அவலங்களையும் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்.

நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரத்தின் இரண்டு முகங்கள் சம்பவத்தை மையமாக எடுத்துக்கொண்டு அதில் அழகான காதல் கதையையும், நாடோடி வாழ்க்கையையும் சேர்த்து மனிதத்தின் முக்கியத்துவத்தை படைப்பாக்கி இருக்கிறார் ராஜு முருகனின் முந்தைய படங்களில் வரிசையில் இந்தப் படம் சேர்ந்தாலும், நடப்பு அரசியல் பேசிய விதத்தில் மிகுந்த கவனத்தைப் பெறுகிறார்.

மொத்தத்தில் ‘ஜிப்ஸி’மனதை கவரும் காதல்.

நடிகர்கள் : ஜீவா, நடாஷா, சுசீலா ராமன், லால் ஜோசப் , சன்னி வேயினர்
இசை : சந்தோஷ் நாராயணன்
இயக்கம் : ராஜூமுருகன்
தயாரிப்பு : அம்பேத்குமார்
மக்கள் தொடர்பு யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.