பி. எல்.தேனப்பன் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, பேபி சாதனா, சமுத்திரகனி, மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பேரன்பு‘.

‘நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்’ என்கிற அமுதவனின் (மம்மூட்டி) குரலுடன் தொடங்கும் படம், இயற்கையை பல அத்தியாயங்களாக பிரித்து பேரன்புமிக்க ஒரு வாழ்வின் தரிசனத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது.

உலகமயமாக்கல் எப்படி தனி மனிதர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது என்று தனது முந்தைய மூன்று படங்கள் மூலம் பேசிய இயக்குநர் ராம், இந்த திரைப்படத்தில் இயற்கையின் முரண் குறித்து கேள்வி எழுப்புகிறார்.

இயற்கை ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்திருக்கிறது. ஆனால் சமமாய் பாவிக்கிறது. ஏன் இந்த முரண்? என்ற கேள்வியே பேரன்பு.

‘ஒரு குருவி, ஒரு குதிரை, ஒரு வீடு, கொஞ்சம் நெயில்பாலிஷ்’

இயற்கை இரக்கமற்றது, இயற்கை அதிசயமானது , இயற்கை மகத்துவமானது, இயற்கை அழகானது, இயற்கை கொடூரமானது, இயற்கை கருணையானது, இயற்கை பேரன்பானது என இயற்கையின் பல்வேறு குணங்கள் ஊடாக விரிகிறது இந்த திரைப்படம்.

இயற்கையின் ஒரு துண்டுதான் மனிதன். இந்த இயற்கையின் குணங்களை எப்படி அவன் வெளிப்படுத்துகிறான் என்பதை பேசுகிறது ‘பேரன்பு’.

ஓடிப்போன மனைவி, உடல் முடியாத மகள் பாப்பா( சாதனா) மனைவியை பற்றி விசாரிக்கும் சமூகத்திற்கு பதில் சொல்ல முடியாமலும், முடியாத மகளை வளர்க்கும் பொறுப்புடனும் அப்பா அமுதவன் (மம்மூட்டி). மகளுக்கு 14 வயது ஆனால் தனியாக தன் சொந்த தேவைகளையே கூட செய்துக்கொள்ள முடியாத நிலை. அவள் தான் ஒரு பெண், அப்பா ஒரு ஆண் என உணரத் துவங்குகிறாள். அப்பாவிடம் இருந்து விலகி நிற்கிறாள். மேலும் அவள் வயதிற்கே உரிய உள் உணர்வுகள் என அத்தனையுமாக அப்பாவான அமுதவனை எதிர்கொள்கிறது. கொஞ்சம் நேரம் கூட தனியாக விட முடியாத மகள், அவளின் பருவ உணர்வுகள், என இயற்கையின் அத்தனை சோதனைகளையும் ஒரு அப்பாவான அமுதவணை சங்கடமான சூழலில் தள்ளுகிறது. முடிவு என்ன என்பது உணர்ப்பூர்வமான கிளைமாக்ஸ்.

மம்மூட்டிக்கே சவால் விடுகிறார் பேபியாக இருந்து ‘தங்க மீன்கள்‘ படத்தில் நடிப்பில் அசத்திய சாதனா. இப்போது டீன் பெண்ணாக ஆச்சர்யம் ஏற்படுத்தியிருக்கிறார். முகம் கை, கால்கள், என அத்தனையையும் சுறுக்கி, எழுந்து நின்று நடப்பது, அடம்பிடிப்பது, டிவிப் பார்த்து உருகுவது என நிச்சயம் சாதனாவிற்கு வரும் நாட்களில் ஏகப்பட்ட விருதுகள் காத்திருக்கின்றன. எப்படி இவர் இந்தப் பாத்திரத்தில் நடித்தார் என ஒவ்வொரு காட்சியிலும் நம்மை கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார்.

அஞ்சலி… ராம் படம் என்றாலே அஞ்சலிக்கு அல்வாதான். அந்த எதார்த்த நடிப்பு எங்கிருந்தேனும் வந்துவிடும். ‘நாங்க ஏன் இப்படி செஞ்சோம்னு கேட்டுட்டுப் போங்க சார்‘ என கெஞ்சும் போது ‘நிஜமாதான் சொல்றியா‘ என்னும் ‘கற்றது தமிழ்‘ ஆனந்தியை ஒரு நிமிடம் கண்முன் நிறுத்துகிறார்.

‘இவ்வளவு அழகான குழந்தை இருக்கும் போதே நீங்க இதை செய்திருக்கீங்கன்னா அப்போ உங்க பிரச்னை என்னன்னு புரிஞ்சிக்கிட்டேன்‘,

‘ரொம்ப நல்ல மனுஷன் மாமா…அப்போ நாம யாருடி‘,

‘என்னையெல்லாம் ரோட்ல பார்த்துட்டே முகத்தைத் திருப்பிட்டு போயிடுவீங்கன்னு நினைச்சேன், வீடு தேடி வருவீங்கன்னு நினைக்கவே இல்ல சார்‘,

‘பிரியம் காட்டுற யாருமே நீண்ட நாள் அவ கூட இருக்க மாட்டாங்கனு அவளுக்கு எப்படி புரிய வைப்பேன்‘ இப்படி படம் முழுக்கவே மனதைக் கனமாக்கும் நிறைய வசனங்கள்.

சிறப்பான உடல்நிலை கொண்ட மகள் – அப்பா கதைகள் ஏராளமாக வந்திருப்பினும் இவர்கள் சமூகத்தில் எதனால் வெறுக்கப்படுகிறார்கள். அதை எப்படி ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும் என்பதை மிகவும் ஜாக்கிரதையாகவே எடுத்து வைத்திருக்கிறார் ராம். மேலும் சமூக பொறுப்பு உணர்ந்து கொஞ்சம் ஒரு படி மேலே சென்றிருந்தாலும் படம் 18+ ஆகிவிடும் மேலும் அது தவறான போக்கில் கதையைக் கொண்டு போய் விடும் என்பதிலும் தெளிவாக செயல்பட்டிருக்கிறார்.

கனமான கதைக்கு மிக கனமான இசையை கொடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. காட்டிற்கு நடுவில் இருக்கும் வீடு, அதைச்சுற்றி நிகழும் காட்சிகள் என ஒவ்வொரு இடத்திலும் மேலும் வலு சேர்க்கிறது பின்னணி இசை. அதற்கேற்ப தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அடடே இப்படியெல்லாம் நாம் வாழும் பூமியில் ஊர்கள் உள்ளனவா என ஏங்க வைத்திருக்கிறார்.

யாராவது இதையெல்லாம் சொல்லித்தானே ஆக வேண்டும் என்னும் சமூக நோக்கத்துடன் சொல்லப்பட்டக் கதை. உன் வாழ்க்கையை விட மோசமான நிலையில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள் என்னும் கருத்து மிக ஆழமாகவே படத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பொறுமையாக படம் பார்த்து கதையை உள்வாங்கி உலக சினிமா வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய படம் ‘பேரன்பு‘.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.