தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் கனவோடு இயங்கிக் கொண்டிருக்கும் கனவு தமிழ்நாடு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கவிழா, சென்னை ஐ.ஐ.டி ஆய்வுப்பூங்கா அரங்கில் 24 ஏப்ரல் (சனிக்கிழமை) 2021 இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள், தொழில்முனைவோர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், கனவு தமிழ்நாடு இயக்கத்தின் சித்தாந்தம், பண்புகள், இலக்கு உள்ளிட்டவை அடங்கிய அறிமுகக் கையேட்டை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். பின்னர், தமிழகத்தை பலதளங்களில் உயர்த்துவதற்காக கனவு தமிழ்நாடு இயக்கம் தொடங்கியிருக்கும் 8 திட்டங்களை (DreamDaa, Dream Names, Dream Startups, Dream Enablers, Dream Teens, Dream Business Centre, Social Justice League and Arasiyal Arivu), அதன் திட்ட இயக்குனர்கள் அறிமுகம் செய்து வைத்து, உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, கனவு தமிழ்நாடு இயக்கத்தின் www.dreamtn.org இணையதளத்தின் துவக்க விழாவும் நடைபெற்றது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அடுத்த பத்தாண்டுகளில் எப்படி வடிவமைக்க வேண்டும் என்பது குறித்து, ‘Dream for the Decade’ என்ற தலைப்பில் கலை, இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம், தொழில்முனைவு, அரசியல் தளங்களில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள்.

முதல் அமர்வு பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவு. இதில், Mafoi நிறுவனத்தின் இயக்குனர் திருமிகு. லதா பாண்டியராஜன், பொருளாதார அறிஞர் திருமிகு. ஜெ.ஜெயரஞ்சன் மற்றும் கிழக்கு பதிப்பகத்தை சேர்ந்த திருமிகு. பத்ரி சேஷாத்ரி ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினார்கள். அடுத்து, கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு அமர்வில் கவிஞரும் பேச்சாளருமான திருமிகு. பர்வீன் சுல்தானா, மருத்துவர் திருமிகு. கு. சிவராமன், பாடகர் திருமிகு. அறிவு ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள். மூன்றாவதாக, அரசியல் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமிகு. கனிமொழி கருணாநிதி, திருமிகு. ஜோதிமணி, முனைவர். திருமிகு. தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.