ஆர்பி பிலிம்ஸ் – ஆர்.பி.பாலா – கௌசல்யா பாலா தயாரிப்பில் இயக்குநர் வி ஆர். துதிவானன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி,, தனலட்சுமி மஞ்சுளா கயல், மணிமேகலை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கொலைச்சேவல்’
கைபேசி மூலம் பேசி பழகும் தீபா – கலையரசன் இருவரும் காதலிக்கிறார்கள். பெற்றோர்களின் எதிரிப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை நாயகி தீபா பாலு, திருமணம் செய்து கொள்கிறார். அந்த ஊர் வழக்கப்படி கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பது வழக்கமான ஒன்றாகும்.
இதனையடுத்து குலதெய்வம் நிறைசூலிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வதற்காக கலையரசன் குடும்பம் கோவிலுக்கு செல்கிறார்கள். பிறகு கலையரசன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி தீபாவை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்ல வழியில் பல தடைகள் வருகிறது.
தடைகளை கடந்து இருவரும் கோவிலுக்கு சென்று சேர்கிறார்கள். பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும் தீபாவையும் கலையரசனும் புறப்பட தயாராகிறார்கள். அப்போது ஒரு கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்கிறது.
இறுதியில் இந்த தாக்குதலில் கலையரசன் , தீபா இருவரும் உயிர் பிழைத்தார்களா? இல்லையா? இவர்களை கொலை செய்ய நினைப்பது யார்? எதற்காக ? என்பதே ’கொலைச்சேவல்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கலையரசன் இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். காதல், அம்மா பாசம், குடும்பம்,நட்பு என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.
அறிமுக நாயகியாக நடித்திருக்கும் தீபா பாலு, குடும்பத்தில் ஒருவரை பார்பபது போல இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாகவும் கணவன் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராகவும் ஒரு உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக இறுதிக்காட்சியில் படம் பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், இதுவரை நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கி வந்தவர் இந்த படத்தின் மூலம் குணச்சித்திர கதாபத்திரத்திலும் தன்னால் முத்திரை பதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக வரும் கஜராஜ். விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்துக்கு பக்க பலமாக உள்ளது. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு காடு மற்றும் மலை பகுதிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆணவ படுக்கையை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாகியிருக்கும் இயக்குநர் வி ஆர். துதிவானன் இத்திரைப்படத்தில் அழகாக காதல், குடும்ப உறவு , நட்பு , குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை கலந்து ஒரு விறுவிறுப்பான குடும்ப திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ’கொலைச்சேவல்’ – வேதனை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா
இசை : சாந்தன்
இயக்கம் : வி ஆர். துதிவானன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்