ஏசி புரொடக்ஷன்ஸ் (AC Productions) சார்பில், தயாரிப்பாளர் ஏ.பி. அசோக் குமார் தயாரிப்பில் இயக்குநர் ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி,, இளவரசு, ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய். ஜீ. மகேந்திரன், காளி வெங்கட், சரவண சுப்பையா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வெஞ்சென்ஸ்’
காளி வெங்கட் வளர்ப்பு மகளான அபர்ணதி பள்ளிக்கூடத்தில் தன்னை யாருமே கண்டு கொள்வதில்லை என்று அப்பாவிடம் கூறுகிறார். அதற்கு படித்து மாவட்ட அளவில் முதல் இடத்திற்கு வந்தால் அனைவரும் உன்னை புகழ்ந்து பேசுவார்கள் என்று அப்பா கூறுகிறார்.
இதனையடுத்து நன்றாக படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால், அந்த மகிழ்ச்சி மூன்று நாட்கள் மட்டுமே நீடிப்பதால் மீண்டும் புகழ் போதைக்கு அடிமையாகிறாள். ஒரு கட்டத்தில் தனது உண்மையான தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளும் அபர்ணதி வளர்ப்பு தந்தை காளி வெங்கட்டை கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து பிரபலம் ஆகிறாள்.
ஒரு கட்டத்தில் மாவட்ட கலெக்டராகும் அபர்ணதிக்கு முதலமைச்சர் இளவரசு மூலம் பல தடைகள் வருகிறது. ஆனால் அந்த தடைகளை முறியடிக்கும் அபர்ணதி முதலமைச்சர் இளவரசுவே அவர் பேச்சை கேட்கும் நிலைக்கு உயர்கிறார். இவரது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாத எதிரிகள் அபர்ணதியை கொலை செய்ய நினைக்க அதில் அபர்ணதி மகளுக்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது.
இறுதியில் அபர்ணதி எதிரிகளிடம் இருந்து மகள் உயிரை காப்பாற்றினாரா ? இல்லையா? மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தாரா ? இல்லையா? என்பதே ‘வெஞ்சென்ஸ்’ படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர் நல்லவரா கெட்டவரா என்று யாரும் யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடை, உடை பேச்சு , தைரியம் , துணிச்சல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, மத்திய அமைச்சராக நடித்திருக்கும் ஜான் விஜய், அபர்ணதியின் வளர்ப்பு தந்தையாக நடித்திருக்கும் காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவராக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் என படத்தில் நடித்த அனைவரும் முக்கியமான கதாபத்திரத்தில் கச்சிதமாக நடிப்பை கொடுத்திருக்கிறார்கள் .
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு கதை வேகத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.
பழிவாங்க நினைக்கும் பெண்ணை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ராகுல் அசோக் இத்திரைப்படத்தை நடந்த சில உண்மை சம்பவங்ககளையும் கற்பனையையும் கலந்து ஒரு அரசியல் ஆட்டத்தை நடத்தியிருக்கிறார். நாயகியின் நடவடிக்கையால் எதிர்க்கொள்ளும் சம்பவங்களையும் சவால்களையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘வெஞ்சென்ஸ்’ – அரசியல் ஆட்டம்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : அபர்ணதி,, இளவரசு, ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய். ஜீ. மகேந்திரன், காளி வெங்கட்
இசை : கார்த்திக் ராஜா
இயக்கம் : ராகுல் அசோக்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்