“டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ்
ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இந்த படத்தை இயக்குநர் மாருதி, ஹாரர்–காமெடி வகையில் ஒரு எவர்கிரீன் படமாக உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் மிகப் பெரிய அளவில் இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சங்கராந்தி பண்டிகையை இரட்டிப்பு கொண்டாட்டமாக மாற்றும் வகையில், ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் மகேஷ் அச்சந்தா கூறியதாவது :
“2026 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் படம் ‘தி ராஜா சாப்’. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மாருதி அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
பிரபாஸ் அண்ணா எனக்கு ஒரு டி-ஷர்ட் பரிசாகக் கொடுத்தார். அந்த ஒரு விஷயமே எனக்கு பெரிய சந்தோஷம். அவருக்கும், பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன். இந்த நிகழ்ச்சிக்காக வந்த ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்தால், பிரபாஸின் ரசிகர் கூட்டம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.”
பாடலாசிரியர் கஸர்லா ஷ்யாம் கூறியதாவது :
“பிரபாஸ் சாருக்காக நான் முதல் முறையாக ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அந்த பாடல் விரைவில் ஒரு சர்ப்ரைஸாக வெளிவரும். மூன்று கதாநாயகிகளுடன் பிரபாஸ் நடனமாடும் பாடலை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து காத்திருக்கிறேன்.”
நடிகை ஜரீனா வாஹப் கூறியதாவது :
“நான் கடந்த 40 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு நல்ல படத்தில் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வழங்கிய பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும், மாருதி காருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் முழு குழுவும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். இந்த படத்தில் பிரபாஸ் உடன் எனக்கு பல காட்சிகள் உள்ளன. நான் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் பிரபாஸ் போல நல்ல மனம் கொண்ட மனிதரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இந்த படத்தில் அவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.”
நடிகர் ரோஹித் கூறியதாவது :
“நான் பாலிவுட்டிலிருந்து வந்தவன். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே ஒரு யூ-டர்ன் எடுக்கவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இதுவரை இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. ரெபல் ரசிகர்களுக்கு எனது வணக்கம். பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிப்பது என்னைப் போன்ற நடிகர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.”
நடிகர் சப்தகிரி கூறியதாவது :
“நான் பிரபாஸ் அண்ணாவுடன் ‘சாலார்’ படத்தில் நடித்தேன். அந்த படத்தின் இடைவேளை காட்சியைப் பார்த்த உடனே, ‘இந்த படம் 2000 கோடி வசூல் செய்யும்’ என்று சொன்னேன் — அது உண்மையாகவே நடந்தது. இப்போது தயாரிப்பாளரின் போனில் ‘தி ராஜா சாப்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன். அது வேறு லெவலில் இருக்கிறது. இந்த படமும் நிச்சயமாக 2000 கோடி வசூல் செய்யும். மாருதி சார், நாமெல்லாம் பார்க்க ஆசைப்பட்ட அந்த பழைய ஸ்டைல் பிரபாஸ் அண்ணாவை இந்த படத்தில் காட்டியிருக்கிறார். கையில் பூ வைத்துக் கொண்டு, ரொமான்டிக் தோற்றத்தில் அவர் தோன்றுவது — இனிமேல் பல வருடங்கள் இப்படிப் பார்க்க முடியாத ஒன்று. ஏனெனில் அவர் இப்போது ஆக்ஷன் படங்கள் மட்டுமே செய்து வருகிறார். இந்த படத்தில் நம்மெல்லாரையும் விட பிரபாஸ் அண்ணாதான் அதிகமாகச் சிரிக்க வைப்பார்.
உங்களைப் போல நானும் பிரபாஸ் அண்ணாவைப் பார்க்கத்தான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.”