பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது. ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.
ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ், எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், “இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் ‘குறையொன்றுமில்லை’ என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,” என்றார்.
இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், “இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்
கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், “இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள். அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கும் நன்றி. ‘கார் மேனி செல்வம்’ ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,” என்றார்.
நடிகர் கோதண்டம் பேசுகையில், “இந்தப் படத்தை ‘ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்’ என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார். பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி – யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.
ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியை சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும், கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். ‘கார் மேனி செல்வம்’ படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்த படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்,” என்றார்.
நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில், “இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்,” என்றார்.
நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில், “அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன். மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பும், எளிமையும் அதிகமாக இருந்தது. அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. அன்பு நிறைந்த படம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.