ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் திரவ் இயக்கத்தில் கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மெல்லிசை’ .
தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார் கிஷோர், அதே பள்ளியில் அவரது மனைவி சுபத்ராவும் ஆசிரியையாக இருக்கிறார். இவர்களுக்கு தீபக் என்ற மகனும், யாழினி என்ற மகளும் இருக்கிறார்கள்.
நாயகன் கிஷோருக்கு சொந்தமாக வீடு இருந்தும் பாடகராக வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமல் போனதால் மன வேதனையில் இருக்கிறார். இவரது மகள் யாழினியின் ஆசைப்படி பாடகராக வேண்டும் என்று தனியார் டிவி நிறுவனம் நடத்தும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கிறார்.
இதற்கிடையில், மகன் தீபக் இளம் வயதிலேயே ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து அதிக சம்பளம் வாங்க தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் கிஷோர் இசை முயற்சி தோல்வியடைவதுடன் பார்த்து வந்த வேலையும் பறிபோகிறது.
இறுதியில் நாயகன் கிஷோர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா ? இல்லையா? பறிபோன வேலை கிடைத்ததா ? இல்லையா? என்பதே ‘மெல்லிசை’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷோர் குமார், குடும்பதா தலைவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குடும்ப பொறுப்பு, ஆசை, லட்சியம் என அனைத்தையும் தூக்கி சுமக்கிற ஒரு சராசரி மனிதராக சிறப்பான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட், குடும்ப தலைவி கதாபாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.
கிஷோரின் மகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி மற்றும் மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன், இருவருமே கதை நகர்விற்கு துணை நிற்கிறார்கள். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜார்ஜ் மரியன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜின் இசையில் பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவு காட்சியோடு பயணிக்க வைக்கிறது.
குடும்பம், ஆசை, லட்சியம், தோல்வி, வெற்றி ஆகிவற்றை மைய மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவகையிருக்கிறார் இயக்குநர் திரவ் இத்திரைப்படத்தில் இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமான முறையில் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘மெல்லிசை’ – மனதை தொடும்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன்
இசை : சங்கர் ரங்கராஜன்
இயக்கம் : திரவ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் A நாசர் ( D’One),