கே.கருப்பசாமி தயாரிப்பில் இயக்குனர் சுகவனம் இயக்கத்தில் : பரோட்டா முருகேசன், கார்த்தீஸ்வரன், சித்ரா நடராஜன், முருகன், விஜய் சேனாபதி, விஜயன், விகடன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ .
கதையின் நாயகனான பரோட்டா முருகேசனுக்கு சித்ரா நடராஜன் மகளும் விஜயன் மகனும் இருக்கிறார்கள். விஜயன் சிறுவயதில் கிணற்றில் தவறி விழ உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மகனை காப்பாற்ற வேண்டி காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு ஒரு வேண்டுதல் வைக்கிறார்.
அதற்காக கிடா குட்டியை வாங்கி வளர்க்கிறார். கிடாவும், மகனும் வளர்ந்து நிற்கிறார்கள். விஜயன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி வருகிறார். அந்த ஊரில் இருக்கும் இரண்டு பண்ணையார்களுக்கு இடையே இருக்கும் மோதலால், கோவில் திருவிழா நடத்த முடியாமல் இருக்கிறது.
இரண்டு பண்ணையார்களையும் சமாதானப்படுத்தி கோவில் திருவிழாவில் பங்கேற்க வைக்க பரோட்டா முருகேசன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையே, பரோட்டா முருகேசனின் மகள் சித்ரா பேசிய நகை போடாததால் மாமியார் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார்.
மறுபக்கம், மகன் விஜயன் தன் காதலுக்காக மோட்டார் பைக் ஒன்றை வாங்குவதற்காக ஆட்டு கிடாயை விற்க முடிவு செய்கிறார். இந்நிலையில் கிடா ஆடு காணாமல் போகிறது.
இறுதியில் காணாமல் போன கிடா ஆடு கிடைத்ததா ? இல்லையா? பரோட்டா முருகேசன் தெய்வத்திற்கு தனது ஆட்டு கிடாயை பலி கொடுத்தாரா? இல்லையா ? , என்பதே ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தின் மீதிக்கதை.
நல்லபாடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரோட்டா முருகேசன், ஏழை விவசாயியாக இயல்பான நடிப்பால் கவர்கிறார். நடை, பேச்சு , உடல்மொழி அசைவு என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் முழுக்கதையையும் தன தோள் மீது சுமந்து நிற்கிறார்.
பரோட்டா முருகேசனின் மகனாக நடித்திருக்கும் விஜயன், மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக நடித்திருக்கும் விஜய் சேனாதிபதி, பேரனாக நடித்திருக்கும் சிறுவன், விகடன், பண்ணையாராக நடித்திருக்கும் கார்த்திகேசன், முருகன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நடராஜன் இசையில் படத்தில் பாடல்கள் இல்லை பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. விமல் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
குல தெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக போராடும் மனிதரின் வாழ்க்கையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுகவனம் இத்திரைப்படத்தில் கிராம மக்களின் வாழ்வியலை அற்புதமாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – வேண்டுதல்
மதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : பரோட்டா முருகேசன், கார்த்தீஸ்வரன், சித்ரா நடராஜன், முருகன், விஜய் சேனாபதி, விஜயன், விகடன்
இசை : நடராஜன் சங்கரன்
இயக்கம் : சுகவனம்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்