நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’திரெளபதி 2’.
மனைவியை இழந்த வாத்தியார் பிரபாகரன் (ரிச்சர்ட்) மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வக்பு வாரியம் மூலம் உறவினர் நிலம் பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஊர் மக்களை ஒன்று திரட்டி ரிச்சர்ட் போராடுகிறார்.. அப்போது வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நாயகி ரக்ஷனா, கோவிலை பராமரிக்க முன் வருகிறார்.
அங்குள்ள கோவிலுக்கு செல்லும் ரக்ஷனா உடம்பில் புகுந்து கொள்ளும் திரௌபதியின் அமானுஷ்யம் ரிச்சர்ட்டிடம் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்பதோடு முன்பு நடந்த கதையை சொல்ல தொடங்குகிறது.
திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்கிறார் வீர வல்லாள மகாராஜாவான நட்ராஜ் (நட்டி). அவரது கருட படையில் குறுநில மன்னரின் வாரிசு வீரசிம்ம காடவராயரான ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார்.
அதே சமயம், மதுரையை மையமாகக் கொண்டு கில்ஜி படைகள் மக்களை மதம் மாற்ற கட்டாயப்படுத்தி, பல கொடுமைகளை செய்து வருகின்றனர். இதற்கு துணையாக , டெல்லியில் இருந்து துக்ளக் என்ற ஆட்சியாளரின் பார்வையும் தமிழகத்தின் மீது விழ, அவர் இங்கு வருகிறார்.
இதை எதிர்த்து போரிடும் நட்ராஜ் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மன்னரைக் காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள துணியும் ரிச்சர்ட் ரிஷி முன்பு நட்ராஜின் ஆன்மா தோன்றி சில பொறுப்புகளை கொடுத்து மாயமாகி விடுகிறது.
மகாராஜாவின் உத்தரவை நிறைவேற்றும் முயற்சியில் வீரசிம்ம காடவராயர் ( ரிச்சர்ட் ரிஷி ) ஈடுபட, அவரது மனைவி திரெளபதி சதிவலையில் சிக்கிக் கொள்வதோடு , தன் கணவரை தவறாக நினைத்து அவரை விட்டு பிரிகிறார்.
இறுதியில் ரிச்சர்ட் ரிஷி மகாராஜா நடராஜ் கொடுத்த கட்டளை நிறைவேற்றினாரா? இல்லையா? நாயகி ரக்ஷனாவுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே ’திரெளபதி 2’ படத்தின் மீதிக்கதை.
வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என்ற இரண்டு வித கதாபாத்திரத்தில் வித்யாசமான நடிப்பபை வழங்கியிருக்கிறார். காதல், வீரம் , நட்பு, விஷவாசம் என அனைத்திலும் தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக திரெளபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா வீர பெண்மணியாக துணிச்சலான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
வல்லாள மகராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நடராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்,
முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிராக் ஜானி, ஜியாசுதீன் தம்கானியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பாவும்,முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி சர்மா, சம்புவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமூர்த்தி, பரணி, திவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருனோதயன் லக்ஷ்மணன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் திரும்ப கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. பிலிப் ராஜ் சுந்தர் ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது.
14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி இத்திரைப்படத்தின் முகலாயர்கள் இந்துக்கள் மீது நடத்திய கொடூரங்களை விவரிக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் அழுத்தமான மற்றும் சுவாரசியமான காட்சிகள் இல்லாதது வருத்தத்தை கொடுக்கிறது.
மொத்தத்தில் ’திரெளபதி 2’ – ஏமாற்றம்
மதிப்பீடு : 2/5
நடிகர்கள் : ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி
இசை ஜிப்ரான்
இயக்கம் : மோகன் ஜி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர் (D’one )
