வால்வாட்ச்சர் பிலிம்ஸ் – கவுதம் செல்வராஜ், எஸ்.குகாபிரியா, எஸ்.நந்தகுமார் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார், அனாகா, யஷ்வந்த், அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வதந்தி – சீசன் 2’ வெப் சீரிஸ்
மதுரையில் அரசு நிகழ்ச்சிக்காக பள்ளம் தோண்டும்போது கிடைக்கும் மர்மமான எலும்புக்கூட்டின் பின்னணியை கண்டறியும் பொறுப்பு காவல் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கை அவர் விசாரணை செய்யத் தொடங்குகிறார்.
எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் கிடைத்த சிதைந்த எலும்புக்கூட்டை வைத்து விசாரணையை தொடங்கும் சசிகுமார், அதே பகுதியில் மேலும் ஒரு எலும்புக்கூடு இருப்பதை கண்டுபிடிக்கிறார். தொடர்ந்து, அந்த இரு எலும்புக்கூடுகளும் பெண்களுடையது என்றும், அவர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் என்றும் விசாரணையில் தெரிய வருகிறது.
எலும்புக்கூடு வழக்கின் பின்னணியில் உள்ள மர்மங்களை கண்டறிய சசிகுமார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபடுகிறார். இரண்டு பெண்களின் கொலைக்கான உண்மை, குற்றவாளி யார், கொலைக்கான காரணம் என்ன என்பதை தேடும் அவரது புலன் விசாரணையில் பல புதிய மர்மங்கள் வெளிப்படுகின்றன. அவற்றை அவர் எப்படி அவிழ்த்து உண்மையை கண்டுபிடிக்கிறார் என்பதே ‘வதந்தி – சீசன் 2’ வெப் சீரியஸ் மீதிக்கதை.
மூசா ராசா என்ற சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார், முதல் முறையாக காவல்துறை அதிகாரி வேடத்தில் தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். அளவான உடல் மொழி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளார்.
மதுரை மாவட்ட எஸ்.பி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனகா, காவல்துறை உயர் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். சீருடை, தோற்றம் மற்றும் நடிப்பு என அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.
முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அறிமுக நடிகர் யஷ்வந்த், மதுரை இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாடு பிடிக்கும் காட்சிகள், நண்பர்களுடனான தருணங்கள், காதல் காட்சிகள் என தனது உடல் மொழி மற்றும் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
அபர்ணா தாஸ், சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் பெரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. சாதாரணமான வேடத்தில் மட்டுமே தோன்றும் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
முடக்கத்தான் மணியின் காதலியாக நடித்துள்ள ரேவதி மற்றும் ‘வதந்தி’ முதல் சீசனில் நடித்த கதாபாத்திரத்தை தொடர்ந்து வரும் விவேக் பிரசன்னா ஆகியோர், தங்களது கதாபாத்திரங்களை குறையின்றி சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் சைமன் கே. கிங்கின் பின்னணி இசை தொடரின் பரபரப்பையும் மர்ம உணர்வையும் அதிகரிக்கிறது. சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
எழுதி இயக்கியுள்ள ஆண்ட்ரூ லூயிஸ், ‘வதந்தி’ இரண்டாம் சீசனில், கொலையாளி யார் என்பதை தேடுவதற்கு பதிலாக, தண்டனை பெற்றவர் உண்மையில் நிரபராதியா என்பதை கண்டறியும் விசாரணைப் பயணத்தை விறுவிறுப்பாக அமைத்துள்ளார். இந்தத் தொடர் விசாரணையுடன் சேர்த்து சமூகத்தில் வாழும் சில மர்மமான மனிதர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வியலையும் பதிவு செய்கிறது.
மொத்தத்தில் ‘வதந்தி – சீசன் 2’ – நீதிக்காக
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : சசிகுமார், அனாகா, யஷ்வந்த், அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி
இசை : சைமன் கே. கிங்கின்
இயக்கம் : ஆண்ட்ரூ லூயிஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
