ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே,.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் எஸ். மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், திவ்யா, ஜான் விஜய், தேவி பிரியா நடிப்பில் வரும் ஜனவரி 2ம் தேதி உலகமெங்கும் ‘தி பெட்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
சென்னையில் வசிக்கும் நாயகன் ஸ்ரீகாந்த் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர்களான பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு செல்ல முடிவு எடுக்கிறார்கள். அதற்காக இவர்களுடன் விலை மாதுவான நாயகி சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள்.
நாயகன் ஸ்ரீகாந்த் நாயகி சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்ள இவரது காதலை சிருஷ்டி ஏற்றுக்கொள்ளவில்லை. ஊட்டிக்கு சென்ற நாளில் இருந்தே நண்பர்கள் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதே சமயம், சிருஷ்டி டாங்கே உடன் உல்லாசமாக இருக்க அவரது நண்பர்கள் ஆசைப்படுகிறார்கள்.
இந்நிலையில், சிருஷ்டி டாங்கே திடீரென்று காணாமல் போகிவிடுகிறார். மறுநாள் நான்கு நண்பர்களில் ஒருவரான விக்ரம் காணாமல் போகிறார். காணாமல் போன இருவரையும் ஸ்ரீகாந்த் தனது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஊட்டி முழுவதும் தேடுகிறார்கள்.
இதற்கிடையில் காணாமல் போன விக்ரம் பிணமாக போலீசால் மீட்கப்படுகிறார். இறுதியில் காணாமல் போன சிருஷ்டியை போலீஸ் கண்டுபிடித்ததா ? இல்லையா ? நண்பன் விக்ரமை கொலை செய்தது யார்? என்பதே ’தி பெட்’ (The Bed) படத்தின் மீதிக்கதை.
ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடித்திருக்கும் நாயகன் ஸ்ரீகாந்த் இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். விலை மாதுவான சிருஷ்டியை நேசிப்பது, காணாமல் போன நண்பனுக்காக ஓர் முழுவதும் தேடி அலைவது, என அனைத்தையும் சரிக்கும்படி செய்திருக்கிறார்.
பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் நாயகி சிருஷ்டி டாங்கே, அழகோடு கொஞ்சம் கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவி பிரியா, நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யா, ஆகியோர் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் பாடல் கேட்டுக்கும் ரகம் , பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. கே. கோகுல் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
பயணியர் தங்கும் விடுதியில் இருக்கும் ஒரு படுக்கையின் பார்வையில் கதையை சொல்லி அதில் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்து கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ். மணிபாரதி இத்திரைப்படத்தின் முதல்பாதியில் குடி, கும்மாளம் என்று செல்ல இரண்டாம் பாதி கொலை , போலீஸ் என்று கதை வேறுபாதையில் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ’தி பெட்’ (The Bed) – புதிய அனுபவம்
மதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், ஸ்ருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், திவ்யா, ஜான் விஜய், தேவி பிரியா
இசை : தாஜ்நூர்
இயக்கம் : எஸ். மணிபாரதி
மக்கள் தொடர்பு : ஏ. ஜான்