மீரா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் சந்திரா, இயக்கத்தில் அஜய் திஷன், தனுஷா, பாண்டியராஜன் , சுனில், லட்சுமி மஞ்சு, விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர் , பிக்பாஸ் சத்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பூக்கி’ .
நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷாவும் காதலிக்கிறார்கள். ஒருநாள் இருவரும் காரில் பயணிக்கும் போது இவர்கள் கார் கண்ணாடியை ஒருவர் உடைத்து விட அவரை விரட்டி செல்லும் அஜய் அந்த நபருடன் சாலையில் சண்டை போட இதை தடுக்க நினைக்கும் நாயகி அஜயை அன்னத்தில் அறைந்து விடுகிறார்.
இதையடுத்து அஜய் தனுஷாவை அறைய இவர்கள் வீடியோ சமூக ஊடகங்ககளில் பரவுகிறது. இதனால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். காதலர்கள் பிரிந்தாலும், இருவரும் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
பழைய காதலை மறப்பதற்காக அஜய் திஷன் – தனுஷா இருவரும் வெவ்வேறு துணையை தேடி செல்கிறார்கள். இறுதியில் அஜய் திஷன் – தனுஷா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா? இருவரும் புதிய காதலை ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன் துடிப்பு மிக்க இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், பிரிவு , ஏக்கம், கோபம், தவிப்பு, அப்பாவின் கனவு என அனைத்தையும் உள்வாங்கி உணர்வு பூர்வமான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா அழகாக இருப்பதோடு அளவான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். காதல், பாசம், கோபம் , சண்டை என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
அப்பாவாக வரும் பாண்டியராஜன், சுனில், மனா னால மருத்துவராக நடித்திருக்கும் லக்ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு கலர்புல்லாக உள்ளது.
காதலர்கள் எதற்காக பிரிகிறார்கள் என்பதை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் சந்திரா இத்திரைப்படத்தில் காதல் பிரிவின் வலியை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் தோல்விக்கு காரணம் மற்றவர்கள் அல்ல அது காதலர்களே என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். காதல், பிரிவு, குடும்பம் , பாசம், கனவு என்று அனைத்து கலந்து ஒரு அழகான காதல் படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ’பூக்கி’ – காதல் உணர்வு
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : அஜய் திஷன் , ஆர்கே தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு
இசை : விஜய் ஆண்டனி
இயக்கம் : கணேஷ் சந்திரா
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)