ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் ‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா ‘நீளிரா’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில், ”என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் ‘நீளிரா’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.
நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமிதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.
இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை. இந்தப் படம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படம் அல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. வெறுப்பையும், வன்முறையையும் பணமாக்க விரும்பாத ஒரு படம்.
இந்த படம் யாரையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்பிற்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களை தான் பதிலாக சொல்ல முடியும்,” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ”மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி.
இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன். நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும்.
இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம். ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.
ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.
படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்,” என்றார்.


