பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் – ஸ்ரீ வினீத் ஜெயின், எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ரைசா வில்சண்ட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X).
இந்திய ரா அமைப்பின் ரகசிய உளவாளியாக இருக்கும் சரத்குமார் (Mr.X) அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஒன்றை பல வருடங்களாக காப்பாற்றி பாதுகாத்து வருகிறார்.
அந்த பொருளை வேறு இடத்திற்கு மாற்றி வைக்கும் வேலையில் தனது மகன் மற்றும் மகளை விட்டு சரத்குமார் பிரிகிறார். பல வருடங்களுக்குப் பிறகு சென்னையில் ஆர்யா தலைமையில் ரா குழு ஒன்று இயங்கி வருகிறது. மருவராக இருக்கும் அனேகாவும் , ஆர்யாவும் காதலித்து வருகிறார்கள்.
சென்னையில் ஹவாலா பணத்தை கைப்பற்றும் வேலையை ஆர்யா குழு செய்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய இராணுவம் சரத்குமாரை கைது செய்கிறது. அதோடு அவர் பாதுகாத்து வைத்திருந்த அணு ஆயுத மூலப் பொருளையும் கைப்பற்றுகிறது.
இந்நிலையில் ராவின் இயக்குனரான மஞ்சு வாரியர் சரத்குமாரை காப்பாற்றுவதற்காக மற்றொரு ரா உளவாளியான கௌதம் கார்த்திக்கை அனுப்பி வைக்கிறார். ஆனால் அது தோல்வியில் முடிகிறது.
இதனையடுத்து மஞ்சு வாரியர் , சரத்குமார் மற்றும் அணு ஆயுத பொருட்களை மீட்டு வர ஆர்யா தலைமையிலான குழுவை ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
இறுதியில் நாயகன் ஆர்யா, சரத்குமார் மற்றும் அணு ஆயுத பொருட்களை மீட்டு இந்தியா கொண்டு வந்தாரா? இல்லையா? சென்னையில் நடத்த இருந்த நாச வேலையை தடுத்து நிறுத்தினாரா ? இல்லையா? என்பதே ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தின் மீதிக்கதை.
ரகசிய உளவாளியாக நடித்திருக்கும் ஆர்யா , கம்பீரமான உடல் தோற்றத்தோடு அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். அப்பா மீதான கோபம், தங்கை பாசம், காதலி மீது காட்டும் பிரியம் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
மிஸ்டர் எக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் படத்தில் நல்லவரா கெட்டவரா என்று யாரும் யூகிக்க முடியாத வித்யாசமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
இரண்டாவது நாயகனாக அறிமுகமாகியிருக்கும் கெளதம் கார்த்திக், ஸ்டைலான வில்லனாக மிரட்டியிருக்கிறார். இவர் செய்யும் முக பாவங்கள் இவருடைய அப்பா நவரச நாயகன் கார்த்திக்கை நினைவுப்படுகிறார்.
ரா அமைப்பு அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், அமைதியாக வந்து இறுதிக்காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார். ரைசா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இசையில் பாடல் மற்றும் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு படத்தை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
உலகில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு கற்பனை கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த் இத்திரைப்படத்தில் உண்மையான ரா உளவாளிகள் குடும்பத்தை விட நாடுதான் முக்கியம் என்று வாழ்கிறார்கள் என்ற உண்மையை அழகாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) – நாட்டை காப்பவன்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ஆர்யா, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ரைசா வில்சண்ட்
இசை : திபு நிணன் தாமஸ்
ஒளிப்பதிவு : அருள் வின்செண்ட்
இயக்கம் : மனு ஆனந்த்
மக்கள் தொடர்பு : A.ஜான்