BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”.
இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது.
வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் ஜெய் பேசியதாவது:
“இங்கே வந்திருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக A.R. முருகதாஸ் சார், சசி சார், சினேகன் சார், எங்கள் ஃபைட் மாஸ்டர், எடிட்டர், இசையமைப்பாளர், கேமராமேன் ரிச்சர்ட் சார் — எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
இப்போது எல்லாருமே பிஸியானவர்கள். அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும், ‘இவர்கள் அழைக்கிறார்கள், போய் பார்க்கலாம்’ என்ற அன்போடு இங்கே வந்திருக்கிறீர்கள். அதற்காக நான் உண்மையாகவே மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். நீங்கள் இந்த நேரத்தை எங்களுக்காகச் செலவழிப்பதை நான் மிகவும் மதிக்கிறேன்.
பொதுவாக என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என்னிடம் ‘உனக்கு பிடித்த இயக்குநர் யார்?’ என்று கேட்பார்கள். நான் எப்போதுமே ஒரே பெயரைத் தான் சொல்வேன் — முருகதாஸ் சார். பின்னாளில் அவர்கள் கூட ஆப்ஷன்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள் — மணிரத்னம் சார், ஷங்கர் சார், முருகதாஸ் சார்… யார் பிடிக்கும்? என்றாலும், நான் ‘முருகதாஸ் சார் தான்’ என்பேன்.
ஏனென்றால் அவருடைய படங்களையும், அவருடைய கேரக்டரையும், பேசும் விதத்தையும் நான் அந்த அளவுக்கு ரசித்திருக்கிறேன். அவருக்கே தெரியாமல் நிறைய விஷயங்களை நான் அவரிடமிருந்து ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். ஒரு விஷயத்தை மிகவும் இனிமையாக, சரியாகப் புரியும்படிச் சொல்வார்.
ஒருநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் வாழ்க்கையில் நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன்.
‘ஷூட்டிங் டைம்ல மட்டும் கொஞ்சம் சீக்கிரம் தூங்குங்க. லேட்டா தூங்கினா டார்க் சர்கிள்ஸ் வரும். அதை மறைக்க மேக்கப் போடுவாங்க. அந்த மேக்கப்புக்கு கேமராமேன் லைட்டிங் மாற்றணும். அதனால் உங்க ஒரு சின்ன தூக்கமின்மை பின்னாடி நிறைய பேரோட வேலையைப் பாதிக்கும்’ என்றார்.
அது எனக்குப் பெரிய பாடம் தந்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன். இன்னைக்கும் மறுநாள் காலை ஷூட்டிங் என்றால் இரவு 10:30 ஆனாலே முருகதாஸ் சார் ஞாபகம் வந்துவிடுவார். அந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் செய்தது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், முதலில் வேறு ஒருவர் பற்றிப் பேச்சு நடந்தது. பின்னர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இசையமைப்பாளர்தான் நமக்கு வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். முதல் பாடலின் முதல் 30 விநாடிகள் கேட்டவுடனே புரிந்துவிட்டது — ‘சரியான ஆள் கிடைத்துட்டார்’ என்று. அந்தப் பாடல் AirPods-ல் கேட்கும்போது அவ்வளவு தரமாக, புதுசாக இருந்தது. அதனால் தான் பாடல் வெளியான உடனே மில்லியன் கணக்கில் பார்வைகள் போனது.
எடிட்டரும் அதே மாதிரி மிக நேர்த்தியாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.
முக்கியமாக ரிச்சர்ட் சார்… ரொம்ப நன்றி சார். உங்கள் உழைப்பை நினைத்தாலே எனக்குக் கஷ்டமாக இருக்கும். நாங்கள் ‘9 to 6 ஷூட்டிங்’ என்று சொல்வோம். ஆனால் காலை 8 மணிக்குப் போய், மாலை 5:30-க்கு ‘சன்செட்டில் இன்னொரு ஷாட் எடுத்தா நல்லா இருக்கும்’ என்று ஆரம்பித்து, அது ஒரு முழு சீனாக மாறி, இரவு 10 மணி ஆகிவிடும்.
நான் வீட்டுக்குப் போகும்போது கூட, ‘இன்னும் ஷூட் முடியல சார், வேறு லொக்கேஷனுக்கு போயிருக்காங்க’ என்பார்கள். அவர்கள் இரவு 12, 1 மணி வரை வேலை செய்து, மறுநாள் காலை 7 மணிக்கே மீண்டும் ஸ்பாட்டில் இருப்பார்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு.அவரை கேமராமேனாக அறிவித்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அப்போதுதான் ‘மாநாடு’ படம் வந்திருந்தது. அந்தப் படம் கேமராமேன், எடிட்டர் இருவருக்கும் மிகச் சவாலான படம். அதைப் பார்த்தவுடன் ‘வாவ்’ என்று தோன்றியது. அதே தரமும், ஃப்ரேமிங்கும் இந்தப் படத்திலும் இருக்கிறது.
இப்போது தயாரிப்பாளர் பாபு விஜய் பற்றிச் சொல்லணும். ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று இந்தப் படத்தில்தான் எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது. ஒரு நடிகனாக இருந்தால், பணம் எங்கிருந்து வருகிறது, என்ன வட்டி கொடுக்கிறார்கள் — இதெல்லாம் தெரியாது. ஆனால் இங்கே நான் நேரில் பார்த்தேன்.
ஒரு ஷாட்டுக்காக கூட அவர் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். தேவையான இடத்தில் செலவு செய்வார். தேவையில்லாத இடத்தில் வீண் செலவு செய்ய மாட்டார். அது ஒரு நல்ல தயாரிப்பாளரின் குணம். இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொன்னால், சில சமயம் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும் கனவில் கூட ‘டார்லிங் ரெடி டார்லிங்’ என்று கூப்பிடுவார் போல இருக்கும். அந்த அளவுக்கு அவர் நம்மைச் சோர்வடைய விடமாட்டார்.
ஒரு நாளில் 150 சீன்கள் எடுத்த மாதிரி வேலை நடக்கும். ஆனால் நம்மை எங்கும் டயர்ட் ஆக விடாமல், ஒரு எனர்ஜிக்குள் வைத்திருப்பார். அவருக்கு வேலை என்ன வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில் யாராவது ஒரு நல்ல சஜெஷன் சொன்னால் அதை அழகாக ஏற்றுக்கொள்வார்.
கதை சொன்ன உடனே எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அவர் முழுக்க ஒரு பேக்கேஜாக இந்தப் படத்தை யோசித்திருந்தார். முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சார் ஃபேன் மொமெண்ட்ஸ் இருக்கும். உடல் மொழி, டயலாக் டெலிவரி — அந்தச் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை முழுக்க வேறு ஒரு இம்பாக்ட்டுக்கு போய்விடும்.
அது ஒரு முதல் இயக்குநருக்கு ரொம்ப சவாலான ஸ்கிரிப்ட். அவர் நினைத்திருந்தால் சாதாரண கமர்ஷியல் பாதைக்கு போயிருக்கலாம். ஆனால் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார். அதனால் இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”
இப்படம் வரும் மே 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
