வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் தயாரிப்பில் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன், ஜெயராம், சத்யராஜ், துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, ஷீலா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஜி.டி.என்’.
“இந்தியாவின் எடிசன்” என்று அழைக்கப்படும் ஜி. டி. நாயுடு அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்’ஜி.டி.என்’
கோவையில் பிறந்த ஜி.டி. நாயுடு, சிறு வயதிலிருந்தே இயந்திரங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக வளர்கிறார். ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி, அதை முழுவதுமாகப் பிரித்து அதன் செயல்பாட்டை அறிந்து கொள்கிறார். பருத்தி ஆலையில் வேலை செய்யும் காலத்தில், விவசாயிகளின் உழைப்பை எளிதாக்கும் சிறிய கருவிகளைக் கண்டுபிடித்து தனது கண்டுபிடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.
பின்னர் தொழில்முனைவோராக உருவெடுத்து, பருத்தி வியாபாரம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுகிறார். ஒரு பேருந்தில் தொடங்கிய தொழிலை, பெரிய போக்குவரத்து நிறுவனமாக வளர்க்கிறார்.
அதன் பிறகு UMS நிறுவனத்தை உருவாக்கி, தனது தொழில் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்கிறார். அவரது அபாரமான வளர்ச்சி சில ஆங்கிலேய அதிகாரிகளின் பொறாமையைத் தூண்டுகிறது. அவருக்கு எதிராக சதி செய்ய முயற்சிக்கிறார்கள்.
அந்தச் சதியின் ஒரு பகுதியாக, நேர்மையான வருமான வரித்துறை அதிகாரி (ஜெயராம்) அவரது விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்படுகிறார்.
இதற்குப் பிறகு ஜி.டி. நாயுடு அந்த சதியை எப்படி எதிர்கொள்கிறார், தனது நேர்மையையும் சாதனைகளையும் எவ்வாறு நிரூபிக்கிறார் என்பதே படத்தின் ’ஜி.டி.என்’ படத்தின் மீதிக்கதை.
ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ள மாதவன், இயல்பான மற்றும் நம்பகமான நடிப்பால் படத்தின் முக்கிய பலமாகத் திகழ்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற நடை, உடை, பேச்சு, கம்பீரம் ஆகிய அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ஜி.டி. நாயுடுவின் இளமை மற்றும் முதுமை ஆகிய இரு பருவங்களையும் மிகக் கச்சிதமாக சித்தரித்து பாராட்டைப் பெறுகிறார்.
வருமான வரித்துறை அதிகாரியாக நடித்துள்ள ஜெயராம், வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நேர்மையும் வில்லத்தனமும் கலந்த அவரது நடிப்பு, கதைக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது.
சத்யராஜ், துஷாரா விஜயன், பிரியாமணி, அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு படத்தின் கதையோட்டத்திற்கும் உணர்வுப்பூர்வமான தாக்கத்திற்கும் வலு சேர்க்கிறது.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவும் அந்தக் காலகட்டத்தின் உணர்வை இயல்பாகக் கடத்தி, படத்திற்கு கூடுதல் உயிரோட்டம் அளிக்கின்றன.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்துள்ளார். இயந்திரங்களின் மீது ஆர்வம் கொண்ட இளைஞன், விடாமுயற்சியால் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபராக உயர்ந்த கதையை, விவசாய சேவை, கண்டுபிடிப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் வருமான வரித்துறையுடனான மோதல் போன்ற முக்கிய நிகழ்வுகளுடன் விறுவிறுப்பாகச் சொல்லியுள்ளார்.
மொத்தத்தில் ’ஜி.டி.என்’ – சாதனை மனிதன்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : மாதவன், ஜெயராம், சத்யராஜ், துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, ஷீலா, கருணாகரன்
இசை : கோவிந்த் வசந்தா
இயக்கம் : கிருஷ்ணகுமார் ராம்குமார்,
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
