மறைந்த தன் தந்தை கட்டிய வீட்டை உறவினர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் இளைஞன் சரண் சக்தி. இதற்காகத் துறைமுக சுங்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு உதவியாகச் சிறிய வேலைகளைச் செய்து வருகிறார். சில மாதங்களுக்குள் பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், தன் நண்பர் பால சரவணனின் வழிகாட்டுதலோடு, சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தல் புள்ளியான ஜே.டி. சக்கரவர்த்தியிடம் இணைகிறார்.
துபாயில் இருக்கும் சர்வதேசக் கடத்தல் தாதா லாலுக்கு ஆதரவாக, ஜே.டி. சக்கரவர்த்தி துறைமுக சுங்கத்துறையில் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில், லால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளைக் கடல் வழியாக இந்தியாவுக்குக் கடத்தத் திட்டமிடுகிறார். குஜராத் துறைமுகத்திற்கு வரும் அந்தப் போதைப்பொருள் கன்டெய்னரைச் சுங்கத்துறை அதிகாரிகளின் கண்ணில் படாமல் பாதுகாப்பாக மீட்பதற்கான பொறுப்பு சரண் சக்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் தன் நண்பர் பால சரவணனுடன் இணைந்து, இந்தப் பணியை முடித்து வாழ்க்கையில் செட்டிலாகத் திட்டமிடுகிறார்.
மறுபுறம், போதைப்பொருள் கடத்தப்படும் ரகசியத் தகவலை அறிந்த நேர்மையான இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரி சமயா முரளி, அந்தக் கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்க அதிரடியாகக் களம் இறங்குகிறார்.
இறுதியில், குஜராத் துறைமுகத்திற்கு வந்த போதைப்பொருள் கன்டெய்னரைச் சுங்கத்துறை அதிகாரிகளை ஏமாற்றி நாயகன் சரண் சக்தி வெளியே கொண்டு வந்தாரா? கடத்தல் மாஃபியா லால் மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தியின் சதியை முறியடித்து அதிகாரி சமயா முரளி அவர்களைக் கைது செய்தாரா? இல்லையா? என்பதே ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ – போதை வேட்டை
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : சரண் சக்தி, ஸ்மேகா, ஜே.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், சமயா முரளி, பால சரவணன், காளி வெங்கட், மைம் கோபி
இசை : சாம் டேனியல்
இயக்கம் : சமயா முரளி
தணிக்கை சான்றிதழ் : U/A
மக்கள் தொடர்பு (PRO) : நிகில் முருகன்
