‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நடிகை ரோஸ்மின் பேசியதாவது, “என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!” என தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன். எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்”.
கதாநாயகன் ராணவ், “ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்” என்றார்.
நடிகர் பரத், “இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் ‘செல்லமே’ திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி”.
இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் தர வேண்டும்” என்றார்.
தயாரிப்பாளர் வரதராஜன், “இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்” என்றார்.