நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நடிகர் பார்த்திபன் பேசியதாவது, “‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் ‘ஹபீபி’ திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.
தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக ‘ஹபீபி’ இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார்.
இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் “.
இயக்குநர் ரஞ்சித், “நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்”.
நடிகர் ஈஷா, ” விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”.
நடிகை மாளவிகா மனோஜ், “தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
இசையமைப்பாளர் சாம் சி எஸ், “வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது”
இயக்குநர் ராம், “பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்”
இயக்குநர் மீரா கதிரவன், “படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் ‘ஹபீபி’. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.
