மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் & ஈரா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன் தயாரிப்பில் இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன்,சேத்தன் ,ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி,செல் முருகன்,நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அன்பே டயானா’ .
சென்னை பெரம்பூர் பகுதியில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பமாக சேத்தன்–ரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈரமாவு வியாபாரம் செய்து தனது கடின உழைப்பாலும், கண்டிப்பான குணத்தாலும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியவர் ரோஜா. குடும்பத்தின் அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார். ஆனால் அவரது கணவர் சேத்தன் அதற்கு நேர்மாறானவர். குடிப்பழக்கம் கொண்டவர்; மனைவிக்குப் பயந்து வாழ்பவர்.
இளமையில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன ஏக்கம் இன்னும் சேத்தனின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால் ரோஜாவை விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையை ஒரு கடமையாகவே நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகள் இஸ்மத் பானு, திருமணமாகி கணவரைப் பிரிந்து தனது பெண் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார். இரண்டாவது மகனான பாரி, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகன் சுதர்சன் படிப்பை முடித்து அரசுப் பணியில் இருக்கிறார்.
இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் ஆங்கிலோ-இந்தியப் பெண்ணான ரம்யாவை பாரி மனதாரக் காதலிக்கிறார். ரம்யாவின் வீட்டிலும் இந்தக் காதலுக்கு முழு சம்மதம் கிடைக்கிறது. ஆனால் தனது தாயின் கண்டிப்பான குணத்தையும், சாதி பற்றிய பிடிவாதத்தையும் நன்கு அறிந்த பாரி, தனது காதலை வீட்டில் சொல்லத் தயங்குகிறார்.
தனது இளமைக் காதல் நிறைவேறாத வேதனையை மனதில் சுமந்து வாழும் சேத்தன் மட்டும், மகனின் காதலுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறார். அதே நேரத்தில், வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த இருவரின் வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி அமையும் என்ற குழப்பமும் பாரியின் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில், தனது தம்பி செல்வமுருகனின் மகளை பாரிக்குத் திருமணம் செய்து வைக்க ரோஜா முடிவு செய்கிறார். குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராகச் செல்ல முடியாமல், பாரியும் திருமண மேடையில் அமர்கிறார்.
இறுதியில் பாரியின் திருமணம் நடந்ததா? பாரி–ரம்யா காதல் வெற்றி பெற்றதா? தனது வாழ்வில் தவறவிட்ட காதலை, மகனின் வாழ்க்கையில் சேத்தன் காப்பாற்ற முடிந்ததா? என்பதே ‘அன்பே டயானா’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் தருணங்கள் முதல், அந்தக் காதலை அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் வரை இயல்பான நடிப்பால் கவர்கிறார். அப்பாவுடன் சகஜமாக உரையாடுவதும், நண்பர்களுடன் கலகலப்பாக இருக்கும் காட்சிகளும் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகின்றன.
ஆங்கிலோ-இந்தியப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன், அந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். நாயகனின் வீட்டிற்கே சென்று டிவியை உடைப்பது, அவரது தந்தையிடம் தைரியமாக பேசி மிரட்டுவது போன்ற காட்சிகளில் மட்டுமல்லாமல், நகைச்சுவைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், இதுவரை வில்லன் வேடங்களில் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறார். காலையில் மனைவிக்குப் பயந்து நடக்கும் கணவனாகவும், மாலையில் மனைவியையே மிரட்டும் கதாபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்தி, நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
கண்டிப்பான குடும்பத் தலைவியாக நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜா, தனது அதிரடியான பார்வை, மிரட்டலான வசன உச்சரிப்பு மற்றும் வலுவான உடல்மொழி ஆகியவற்றின் மூலம் கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, படம் முழுவதும் தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். தாய்மாமாவாக வரும் செல்வமுருகன், மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகக் கேட்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்றவாறு பயணித்து, உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியை அழகிய காட்சிகளாகப் பதிவு செய்து படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்திருக்கிறார்.
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவரின் காதலையும், அவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் பாரி இளவழகன், சாதி, மத எல்லைகளைக் கடந்து காதல், பாசம், குடும்பம், நட்பு, உறவு மற்றும் நகைச்சுவை ஆகிய அனைத்தையும் அழகாகக் கலந்து, ஒரு கலகலப்பான குடும்பத் திரைப்படத்தை வழங்கியிருக்கிறார். அனைத்து மனிதர்களும் அன்பின் மூலம் ஒன்றிணைய வேண்டும் என்ற அழகிய கருத்தை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் பாரி இளவழகன் பாராட்டுக்குரியவர்.
மொத்தத்தில் ‘அன்பே டயானா’ – அழகான காதல்
மதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : பாரி இளவழகன்,ரம்யா ரங்கநாதன்,சேத்தன் ,ரோஜா செல்வமணி,பரிதாபங்கள் கோபி
இசை : பரத் சங்கர்
இயக்கம் : பாரி இளவழகன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
