90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அருள்வான் ’.
பூங்குடி மலைவாழ் பகுதியில், ஆரவ் தனது மனைவி ரம்யா பாண்டியன் மற்றும் மகள் கிருத்திகாவுடன் வசித்து வருகிறார். மலை உச்சிகளில் இருந்து தேன் சேகரிப்பதே அவரது தொழில். அப்பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வன அதிகாரி ஜான் விஜயின் நடவடிக்கைகளை ஆரவ் எதிர்ப்பதால், இருவருக்கும் மோதல் உருவாகிறது.
மலைப்பகுதியில் கல்வி வசதி இல்லாததால், பள்ளிக்குச் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இருந்தாலும், தனது மகள் கிருத்திகாவை எப்படியாவது படிக்க வைப்பேன் என்று ஆரவ் உறுதி எடுக்கிறார்.
அங்கிருக்கும் பள்ளி ஆசிரியையைச் சந்திக்கும் கிருத்திகாவிடம், “உங்கள் கிராமத்திற்கு பள்ளி வர வேண்டுமெனில், ஊர் மக்கள் கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
இதற்கிடையில், ஊர் தலைவராக இருக்கும் ஆரவின் மாமாவிடம் வெற்றுக் காகிதத்தில் கைரேகை வாங்கி, மலைவாழ் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் மனவேதனை அடைந்த மாமா, தனது கட்டைவிரலை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஊர் மக்களை ஒன்றிணைத்து கலெக்டரைச் சந்திக்க ஆரவ் முடிவு செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் கிருத்திகா பருவமடைகிறார். இதனால் ஒரு வாரம் கிராமத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது; மேலும் உடனடியாக அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பதும் அந்த சமூகத்தின் பழக்கமாக உள்ளது.
கல்விக்காக இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, கலெக்டரைச் சந்திக்கச் செல்லும் கிருத்திகா, வழியில் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இறுதியில், கிருத்திகா குணமடைந்தாரா? கலெக்டரைச் சந்தித்து தனது கிராமத்திற்கு கல்வி வசதி பெற்றுத் தந்தாரா? அவரது கல்விக் கனவு நனவானதா? என்பதே ‘அருள்வான்’ படத்தின் மீதிக்கதை.
தேனி மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் அருள்நிதி, அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முள் வேலிகளை அகற்றும் காட்சிகளிலும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளிலும் தனது ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். “எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதியுடன் பேசும் காட்சியில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், மலைவாழ் மக்களின் உற்ற தோழனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி மீதான பாசம், மகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் போராட்டம், தவறு செய்யும் வன அதிகாரியை எதிர்த்துப் போராடும் காட்சிகள் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
ஆரவின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், மலைவாழ் கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு முழுமையாகப் பொருந்தியிருக்கிறார். படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்திகா, கல்வி கற்கத் துடிக்கும் சிறுமியாக தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
கொடூர குணம் கொண்ட வன அதிகாரியாக வரும் ஜான் விஜய், பத்திரிகையாளராக நடித்திருக்கும் காளி வெங்கட், மேல் வன அதிகாரியாக நடித்திருக்கும் ‘பருத்திவீரன்’ சரவணன், விடிவி கணேஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் சேர்த்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சுகுமாரின் ஒளிப்பதிவு மலைகள், அருவிகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை எழிலை கண்முன் நிறுத்தி ரசிக்க வைக்கிறார்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியுள்ள இயக்குநர் கணேஷ் விநாயகன், கல்வியின் அவசியம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வலுவாகப் பதிவு செய்திருக்கிறார். வாழ்க்கையில் எத்தகைய சவால்கள் வந்தாலும் கருணை, துணிச்சல், பொறுப்பு ஆகியவற்றுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தை படம் அழுத்தமாக எடுத்துரைக்கிறது.
எனினும், சில இடங்களில் திரைக்கதையை இன்னும் விரிவுபடுத்தியிருந்தால் கதாபாத்திரங்களின் உணர்வுகளும் பின்னணியும் மேலும் ஆழமாகப் பதிவாகியிருக்கும். இருந்தபோதிலும், சமூக அக்கறை, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் தரமான படைப்பாக ‘அருள்வான்’ திகழ்கிறது. சிந்திக்கவும் விவாதிக்கவும் தூண்டும் இந்தப் படம், நல்ல கருத்தை வலுவாகப் பதிவு செய்யும் படைப்பாக பாராட்டப்பட வேண்டியது.
மொத்தத்தில் ‘அருள்வான் ’ – கல்வியை கொடுப்பவன்
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா
இசை ஜி வி பிரகாஷ் குமார்
இயக்கம் : கணேஷ் விநாயகன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
