சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், சஞ்சனா, வாமிகா கபி, கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிரிஷ் தயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டிசி’ (DC) .
வேலூரில் வசித்து வரும் கஸ்தூரி ராஜாவுக்கு, தனது மகன் லோகேஷை நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் ஒரு பெரிய ஆளாக வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவு. ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் லோகேஷ் தனது தாய் மாமன்களை கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறான்.
மகனைப் பற்றிய கஸ்தூரி ராஜாவின் கனவுகள் அனைத்தும் சிதைந்து போகின்றன. மகனை நல்ல நிலையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதால், அவர் மனதளவில் முற்றிலும் உடைந்து போகிறார்.
மகன் செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவனுடன் பேசுவதையே கஸ்தூரி ராஜா நிறுத்திவிடுகிறார். இந்நிலையில், போலீஸாரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு உதவி செய்யும் முயற்சியில், லோகேஷ் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்கிறார். அதே நேரத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு, அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்.
ஆனால், ஒரு போலீஸ் அதிகாரியை கொலை செய்ததால் லோகேஷை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகும் லோகேஷ், சஞ்சனாவை சந்திக்கிறார்.
சஞ்சனாவுடனான சந்திப்பு லோகேஷின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இருவருக்கும் இடையே நெருக்கம் உருவாகத் தொடங்கும் நேரத்தில், லோகேஷை பிடிப்பதற்காக போலீஸார் அங்கு வருகின்றனர். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சஞ்சனா பரிதாபமாக சுட்டுக் கொல்லப்படுகிறார்.
சஞ்சனாவின் மரணம் லோகேஷை மேலும் உடைத்துப் போடுகிறது. ஏற்கனவே குற்ற உணர்விலும், விரக்தியிலும் சிக்கித் தவிக்கும் அவனுக்கு, இந்தச் சம்பவம் போலீஸாருக்கு எதிரான கோபத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.
விபச்சாரத் தொழிலில் சிக்கித் தவித்த வாமிகா கபியை லோகேஷ் காப்பாற்றுகிறார். எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கும் வாமிகா, லோகேஷுடன் இணைந்து பயணிக்கத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தில், தன்னை சீரழித்த மருத்துவரை வாமிகா கொலை செய்கிறார்.
இதனால், ஏற்கனவே போலீஸாரால் தேடப்பட்டு வரும் லோகேஷுடன் வாமிகாவும் சேர்ந்து போலீஸாரின் குறியாகிறார். இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றனர்.
ஒருபுறம் போலீஸாரின் துரத்தல், மறுபுறம் கடந்த காலத்தில் செய்த குற்றங்களின் நிழல் என இருவரின் பயணமும் பரபரப்பாகத் தொடர்கிறது.
லோகேஷும் வாமிகாவும் போலீஸாரிடம் இருந்து தப்பித்தார்களா?
மகன் செய்த செயல்களால் அவனிடம் பேசாமல் இருக்கும் கஸ்தூரி ராஜா, இறுதியில் மகனுடன் பேசினாரா?
இதற்கான பதிலே ‘டிசி’ (DC) படத்தின் மீதிக்கதை.
தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் அதிரடி நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பது, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, காவல்துறையினரையே நடுங்க வைப்பது என பல்வேறு காட்சிகளில் தனது அதிரடி நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்திற்கு தேவையான மாஸ் தன்மையை கொடுக்கின்றன. தேவதாஸ் கதாபாத்திரத்தை தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவரும் வகையில் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி, நரகமாக மாறிய தனது வாழ்க்கையின் வலியையும் வேதனையையும், அதிகமான வசனங்கள் இல்லாமலேயே தனது உடல்மொழி மற்றும் முகபாவனைகள் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா ஏ.கே., அதிகப்படியான ஒப்பனையுடன் அறிமுகமாகி, சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகிறார். இருப்பினும், கதையில் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்படும் முடிவு பார்வையாளர்களின் மனதை கனக்கச் செய்கிறது.
தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு கச்சிதமான தேர்வாக இருக்கின்றனர். தங்களது கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து, அனைவரும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளுக்கு அவரது இசை கூடுதல் விறுவிறுப்பையும் பரபரப்பையும் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி, சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் வேகமாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளின் தீவிரத்தை உணர வைக்கும் வகையில் அவரது ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அக்மார்க் முத்திரையான இரத்தமும் சதையும் கலந்த திரைக்கதையும், காட்சியமைப்புகளும் இப்படத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் வேகமாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் கோபம், எதிர்பார்ப்பு, ஏக்கம், ஏமாற்றம் உள்ளிட்ட உணர்வுகளையும் ரசிகர்களிடையே கடத்துவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘டிசி’ (DC) – சத்தம் குறைவு இரத்தம் அதிகம்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : லோகேஷ் கனகராஜ், சஞ்சனா, வாமிகா கபி, கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிரிஷ் தயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத்
இசை : அனிருத்
இயக்கம் : அருண் மாதேஸ்வரன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K. அகமது, பாரஸ் ரியாஸ்
