துபாயில் பல ஆண்டுகள் கடின உழைப்பைச் செலுத்திவிட்டு, அதுவரை நேரில் பார்த்திராத தன் எட்டு வயது மகனைக் காணும் பெருங்கனவுடனும், சிறுகச் சிறுகச் சேமித்த வாழ்நாள் முதலீட்டுடனும் ரயிலில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புகிறார் எளிய மனிதரான சூரி. அவர் பயணிக்கும் அந்த ரயிலின் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) பொதுப் பெட்டியில், அடர்ந்த தாடியுடனும் நீண்ட தலைமுடியுடனும் ஒரு விசித்திரமான நபர் (நிவின் பாலி) ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். உறக்கத்திலும் தன் கனவில் தோன்றும் ஒரு மர்மப் பெண்ணைப் பற்றி அவர் பிதற்றிக் கொண்டிருக்க, ரயிலில் ஏறும் சூரி அவரை எழுப்பும் அந்தத் தற்செயலான தருணத்திலிருந்து இருவருக்குமான விசித்திரமான சந்திப்பு துவங்குகிறது.
சமூகத்தின் எந்தவொரு பொது விதிகளையும் மதிக்காமல் முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் செயல்படும் அந்த விசித்திர மனிதர், சூரியிடம் ஒரு அசாத்தியமான உண்மையை வெளிப்படுத்துகிறார். தான் ஒரு சராசரி மனிதன் அல்லவென்றும், சுமார் 8,000 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாகாவரம் பெற்று இந்த பூமியில் வாழ்ந்து வரும் ஒரு காலமற்ற ஆளுமை என்றும் கூறுகிறார். காலங்களும் யுகங்களும் மாறினாலும், கடந்த நான்கு பிறவிகளாகத் தான் உருகி உருகி நேசித்த தன் காதலி பத்மாவை (அஞ்சலி), இந்த ஐந்தாவது பிறவியிலும் தேடி அலைந்து கொண்டிருப்பதாக அவர் விவரிக்கிறார்.
ஆரம்பத்தில் இவரை ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தள்ளிவிடம் சூரிக்கு, காலப்போக்கில் அந்த மனிதர் பேசும் யுகம் கடந்த வரலாற்றுச் சம்பவங்களும், அவரது கட்டுக்கடங்காத வன்முறையும் பெருத்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இவர்களது இந்த விசித்திரமான ரயில் பயணத்தில், அங்கே சுற்றித் திரியும் ஒரு சிறிய எலியும் ஒரு முதன்மைக் கதாபாத்திரமாக உருவெடுத்து இவர்களுடன் பயணிக்கத் துவங்குகிறது.
ஒரு கட்டத்தில், நிவின் பாலியின் கணிக்க முடியாத விசித்திரமான நடவடிக்கைகளால் சூரிக்குச் சூழ்ந்து கொள்ளும் வெளியுலக ஆபத்துகளும் மரண பயமும், அந்த ஓடும் ரயிலில் இருந்து அவரைத் தப்பிக்கவும் வழியின்றி முடக்குகின்றன. யுகங்களைக் கடந்த அந்த அழியாத மனிதனின் பிடியில் இருந்து சூரி எப்படி விடுபடப் போகிறார்? கடந்த நான்கு பிறவிகளாகத் தோற்றுப்போன தன் காதலை, 8,000 வருடங்கள் கழித்து இந்த ஐந்தாவது பிறவியிலாவது நிவின் பாலி மீட்டெடுத்தாரா? என்பதே ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை!
மொத்தத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ – யுகங்களைக் கடந்த தேடல்!
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள்: நிவின் பாலி, சூரி, அஞ்சலி
இயக்கம்: ராம்
இசை: யுவன் சங்கர் ராஜா
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்
