ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், எஞ்சாய் பிலிம்ஸ், ஃபெரோ மூவி ஸ்டேஷன் – கார்த்திகேயன்.எஸ், ஃபெரோஷ் ரஹிம், எஞ்சாய் சாமுவேல் தயாரிப்பில் இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், பரணி, சரண், தென்றல், முல்லையரசி, சுதாகர், யாஷ்மின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அங்கம்மாள்’.
பால் வியாபாரம் செய்து வரும் கீதா கைலாசம் கணவரை இழந்தவர் தனது 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்க்கிறார்.’ஜாக்கெட்’ அணிவதை விரும்பாதவராக இருக்கிறார். விவசாயம் செய்து வரும் மூத்த மகன் பரணிக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகனுடன் அம்மாவுடன் வசித்து வருகிறார்.
இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராக இருக்கிறார். சரண் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது அம்மாவை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்பதாலும், அம்மா ஜாக்கெட் அணிய வேண்டும் என்று விரும்புகிறார்.
இதனால், தனது அண்ணியின் உதவியோடு தனது அம்மாவை ஜாக்கெட் அணிய வைக்க போராடுகிறார். ”ஜாக்கெட்’ அணியமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் கீதா கைலாசம்
இறுதியில் கீதா கைலாசம் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுத்தாரா? இல்லையா? சரணின் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ’அங்கம்மாள்’ படத்தின் மீதிக்கதை.
அங்கம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம் அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இரு சக்கர வாகனம் ஓட்டுவது, சுருட்டு பிடிப்பது, ஜாக்கெட் அணியாமல் இருப்பது என முழுப்படத்தை தாங்கி நிற்கிறார்.
அங்கம்மாளின் மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி, நடிப்பு கவனிக்க வைக்கிறது. அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றல், இளைய மகனாக நடித்திருக்கும் சரண், அவரது காதலியாக நடித்திருக்கும் முல்லையரசி, சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், சிறுமி யாஷ்மின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்,
இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அற்புதமாக படமாக்கியிருக்கிறார்.
அம்மா – மகன் இருவருக்கிடையே நடக்கும் போராட்டத்தை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். இத்திரைப்படத்தில் அங்கம்மாளின் வாழ்க்கை பயணத்தில் சூழ்நிலைகளால் அவர்களால் இறுதி வரை தங்களது விருப்பம் போல் வாழ முடிவதில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’அங்கம்மாள்’ – தைரியமானவள்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : கீதா கைலாசம், பரணி, சரண், தென்றல், முல்லையரசி, சுதாகர், யாஷ்மின்
இசை : முகமது மக்பூல் மன்சூர்
ஒளிப்பதிவு : அன்ஜாய் சாமுவேல்
இயக்கம் : விபின் ராதாகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர் (D’one)