இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது..
படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,
12 படங்கள் இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆதரவு தான் காரணம். சுஹாசினி மேடம் பேச்சு எளிமையாக, தெளிவாக இருந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சுஹாசினி மேடம் தான் என்னை உதவி இயக்குநராக மணி சாரிடம் சேர்த்துவிட்டார்.
இன்று வேகமாக இயக்குகிறேன் என்றால், மணி சாரிடம் கற்றுக் கொண்டது தான் காரணம். காலை 6.30 மணிக்கெல்லாம் முதல் ஷாட் எடுத்து விடும் பழக்கம் கொண்டவர் மணி சார் . மிலிட்டரி வீரர் போல உழைப்போம். அன்று கற்று கொண்டது.. இன்று வேகமாக நல்ல படங்களை எடுக்க முடிகிறது.
எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. மலையாளத்தில் நிமிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருந்தார். நல்ல படங்கள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கு அவருடைய ஈடுபாடு தான்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,
இந்த நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சுஹாசினி மேடமிற்கு நன்றி. இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ஒரு இயக்குநர். இந்த படத்தில் நடிக்கும் போது நான் இதுபோன்ற ஆள் இல்லை என்று கூறினார்.
இதுபோன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.







Leave a Reply