ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ பட இயக்குநர் நந்தா பெரியசாமி, ‘தலைக்கூத்தல்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, இயக்குநர் மலையன் கோபி, இயக்குநர் கார்த்திக், பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன், நடிகர் தீபக், ஹரீஷ் ஆகியோருடன் சமுத்திரக்கனி, இயக்குநர் தனராஜ், தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, கதாநாயகி மோக்ஷா, ப்ரமோதினி, பாடலாசிரியர் முருகன் மந்திரம் முதலிய படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் பிருத்தவி பேசுகையில், “தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் அப்பாவை அழைத்து, ‘ஐ மிஸ் யூ’ என படம் பார்ப்பவர்கள் சொல்வார்கள்” என்றார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசுகையில், “கல்லா இருந்த என்னை மாணிக்கக்கல்லாக மாற்றினார் சமுத்திரக்கனி. ராமரால் அகலிகைக்கு வாழ்க்கை கிடைச்சது போல், அவரால் எனக்கு வாழ்க்கை கிடைத்தது. அவர் சிறகில்லா தேவதை. அனைவரையும் கை பிடிச்சு உயர கூட்டிட்டுப் போவார். ‘ராமம் ராகவம்’ பத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது, என் மனதில் அப்பா மின்னல் போல் வந்துட்டுப் போனார். இதுதான் இந்தப் படத்தோட வெற்றி” என்றார்.



Leave a Reply