டீச்சர்ஸ் ஸ்டிக் ப்ரொடக்ஷன் சார்பில் டாக்டர். வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில் இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில் பிரபாகரன், மேஹாலி மீனாட்சி, லெனின் வடமலை, துகின் சே குவேரா, வினிதா கோவிந்தராஜன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’யாரு போட்ட கோடு’ .
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன் வேலை பார்த்து வருகிறார். மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுக்கிறார்.தீமைக்கு எதிராக போராட்ட மாணவர்களை தயார்படுத்துகிறார்.
இதே ஊரில் தலைவராக இருக்கும் லெனின் வடமலை சாதி வெறி பிடித்தவராக இருக்கிறார். மதுபான கடையை அகற்ற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த, அரசு சம்மந்தப்பட்ட மதுபான கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றுகிறது.
இதனால், பார் நடத்தும் வில்லன் லெனின் வடமலைக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதால், ஆசிரியர் பிர்பாகரன் மீது கோபம் கொள்கிறார். ஆசிரியர் பிரபாகரனின் அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் லெனின் வடமலை பாதிக்கப்படுகிறார். இதனால், ஆசிரியர் பிரபாகரனை பழிவாங்குவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலிக்கிறார்கள். அதே சமயம், மேஹாலி மீனாட்சி ஏற்கனவே திருமணமானவராக இருக்கிறார். இந்த விசயம், லெனின் வடமலைக்கு தெரிய வர, இதை வைத்தே ஆசிரியர் பிரபாகரனை பள்ளியில் இருந்து விரட்டியடிக்க திட்டம் போடுகிறார்.
இறுதியில் வில்லன் லெனின் வடமலை ஆசிரியர் பிரபாகரனை பள்ளியில் இருந்து வெளியே அனுப்பினாரா? இல்லையா? மேஹாலி மீனாட்சியின் கணவர் யார்? என்பதே ’யாரு போட்ட கோடு’ படத்தின் மீதிக்கதை.
ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகன் பிரபாகரன் கச்சிதமாக பொருந்துகிறார். இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதல், சண்டை, பாசம், . சமூக நீதி, அரசியல் நுணுக்கம், சமத்துவம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.
ஆசிரியையாக நடித்திருக்கும் நாயகி மேஹாலி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை சாதி வெறிபிடித்த தலைவராக நடித்து மிரட்டியிருக்கிறார்.
வில்லன் லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்கும் வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் மிரட்டுகிறார். வில்லனின் மனைவியாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர். வினிதா கோவிந்தராஜன் நடிப்பு பாராட்டுக்குரியது.
இசையமைப்பாளர் செளந்தர்யன் இசையில், லெனின் வடமலையின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. ஜெய்குமாரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
இன்றைய சமூகத்தில் நடக்கிற முக்கிய பிரச்சனைகளை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் லெனின் வடமலை. இத்திரைப்படத்தில் சமூக பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் படத்தில் பேசியிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் ’யாரு போட்ட கோடு’ – மாணவர்கள் புரட்சி
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : பிரபாகரன், மேஹாலி மீனாட்சி, லெனின் வடமலை, துகின் சே குவேரா, வினிதா கோவிந்தராஜன்
இசை : செளந்தர்யன். ஜெய்குமார்
இயக்கம் : லெனின் வடமலை.
மக்கள் தொடர்பு : விஜய் கார்த்திக்a