ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
நடிகை சைத்ரா பேசியதாவது..,
“இங்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ராஜு சார் மற்றும் எங்கள் சினிமாவுக்காக நீங்கள் இங்கு வந்து பேசியது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என் நடிப்பைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது”
“தமிழ் மொழி எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமானது. இந்தப் படத்தின் மூலம் அந்த விருப்பம் இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழ் மொழியை மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அனுபவம் எனக்குள் உருவாக்கியுள்ளது”
இயக்குநர் ராஜு சார் குறித்து சொல்ல வேண்டும் அவருடைய படங்களை நான் முன்பே அறிந்திருந்தாலும், அவருடைய மனிதநேயமும் நம்பிக்கையும் இந்தப் படத்தின் போது எனக்கு நெருக்கமாக தெரிந்தது. ஆரம்பத்தில் எனக்கு சிறிது பயம் இருந்தது. ஆனால் அவர் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இந்தப் பயணத்தை எனக்கு எளிதாக்கியது. சசிக்குமார் மிகப்பெரிய இயக்குநர் நடிகர் அவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம் அவர் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.
“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக என்னை இணைத்துக்கொண்ட ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முழு படக்குழுவிற்கும் மனப்பூர்வமான நன்றி. இந்த அனுபவம் என் வாழ்க்கையிலும், கலைப் பயணத்திலும் என்றும் நினைவில் இருக்கும்” நன்றி.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இதில் சொல்லப்படும் கருத்தும், அதை அணுகிய விதமும் நேர்மையானது. சமூக உணர்வோடு சொல்லப்படும் விஷயங்கள் எளிதானவை அல்ல. ஆனால் அவை மனிதர்களை மையமாக வைத்து பேசும்போது தான் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராஜுமுருகன் இந்தப்படத்தின் கதை சொன்னபோது இது சமூகம் சார்ந்த படமாக இருக்குமென்று நினைத்தேன் ஆனால் இது ஜனரஞ்சக படமாகவும் இருந்தது. இசை, காட்சி அமைப்பு, பாடல்கள் – அனைத்தும் கதைக்கு ஆதரவாக, சினிமாட்டிக் அனுபவத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. வெறும் எண்டர்டெயின்மெண்ட் மட்டுமல்ல; சிந்திக்க வைக்கும் உள்ளடக்கத்தையும் இந்த படம் வழங்குகிறது.
நான் அண்ணா எனச் சொல்லி பெருமைப்படும் நபர் சசிக்குமார் அவரிடம் எந்த ஈகோவும் இல்லை. மிகச்சிறந்த மனிதர் இந்தப்படத்தை மிகச்சிறப்பாக ஆக்கியிருக்கிறார். சைத்ரா நடிப்பை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கோவில்பட்டி பொண்ணாக மாறியிருக்கிறார்.
இந்த முயற்சி ஒரு தனித்துவமான கலை அனுபவம். இந்த படக்குழுவினரின் உழைப்புக்கும், நேர்மையான அணுகுமுறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,
“இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் ஒரு பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கரைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான்? அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும்? என்பதையே இந்த படம் கேள்வியாக முன்வைக்கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம்,”
“இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு வழிகாட்டிகள். இங்கே கிடைக்கும் வாழ்த்துகளை நான் என் அண்ணன் பாலாவுக்கு ஒப்படைக்கிறேன். இது எனக்கான வாழ்த்து அல்ல; இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்குமானது.
“இந்த கதையை, ‘கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழு சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர். இப்படிப்பட்ட நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காக தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றார்.
“இந்த படம் ஒரு கூட்டுப் பயணம். நடிகர்கள், இசையமைப்பாளர், பாடகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் தங்களது முழு உழைப்பையும் நேர்மையையும் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குநர் ராஜுமுருகனை சைக்கோ என்றார்கள் நானே பயந்தேன் அவருடன் வேலைபார்த்த போது அவர் அப்படி இல்லை. படம் முடித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவர் சினிமா மீது தான் சைக்கோவாக இருக்கிறார். அவர் நல்ல படங்கள் தருவதில் சைக்கோவாக இருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும். நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்,” நன்றி.
இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது..,
உண்மையிலேயே இது எனக்கு கொஞ்சம் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. என்னைப் பற்றி இவ்வளவு அர்த்தமுள்ள, ஆழமான வார்த்தைகளை இங்கே பலர் பேசினார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.
“நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த களத்தில் தினமும் பாலா சாரின் பிதாமகன் படத்தின் சிடியை 52 முறை வாங்கியிருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும், நேர்மையையும் சினிமாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அந்தப்படம் தந்தது அவர் வந்து வாழ்த்தியது பெருமை.
மாரி செல்வராஜின் படங்கள் என்னையே வெட்கப்பட வைத்தது. அவர் மூலம் நான் கற்றுக்கொண்டேன் அவர் வாழ்த்தியதும் மகிழ்ச்சி. என் குருநாதர் லிங்குசாமி சார் என்னை கரம்பிடித்து சினிமாவில் அழைத்து சென்ற அவருக்கு என் நன்றிகள்.
குரு சோமந்தரம், ஏ வெங்கடேஷ், ரவிக்குமார், ஞானவேல், யுகபாரதி என இங்கு வந்து வாழ்த்திய ஆளுமைகள் அனைவருக்கும் என் நன்றி.
நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம்.
இந்த படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல. ‘ராஜுமுருகன்’ என்ற மனிதன் மீது ‘அம்பேத்குமார்’ என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட் உருவானது,” என்று அவர் கூறினார்.
“அம்பேத்குமார் என்ற மனிதர் இல்லையென்றால் இந்த படம் உருவாகியிருக்காது. நான் என் வாழ்க்கையில் மிகவும் டவுன் ஃபாலில் இருந்த ஒரு காலகட்டத்தில், என்னை அழைத்து ‘வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் சார், ஒரு நாள்கூட உட்காரக் கூடாது’ என்று சொல்லி, அடுத்த நாளே படம் பண்ணத் தொடங்குவதற்கான மனநிலையை எனக்கு கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி,”
“இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயல்பாகவே வேண்டிக் கொள்வது, அந்த நம்பிக்கையை என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம்,” என்றார்.
“இந்த படத்தை முதல் நாளிலிருந்து தன் தோளில் சுமந்து, எப்படியாவது இந்த சந்தையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து என் கூடவே இருந்தவர் Think Music சந்தோஷ். படம் பார்த்த நாளிலிருந்து இன்று வரை இந்த படத்தைப் பற்றி பேசிக்கொண்டே, ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்தார். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், சந்தோஷ் அந்த இடத்தில் இருந்தால் அது நிச்சயம் கிளியராகிவிடும். அவர் எப்போதும் எனக்கு ‘ஆல்-டைம் டார்லிங்’,”.
“இந்த படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆரம்பத்தில் கால்ஷீட் தொடர்பான சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் கதையை கேட்டவுடன், அனைத்தையும் தாண்டி உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
ஷான் ரோல்டனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு வெறும் இசை மட்டுமல்ல. அது இலக்கியம், அரசியல், சமூகம் என்று பல அடுக்குகளைக் கொண்ட ஆத்மார்த்தமான உறவு. அந்த எல்லாமே சேர்ந்து தான் அவரது இசையாக வெளிப்படுகிறது. இந்த படத்தில் அவர் இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறார்.
சசிக்குமார் அண்ணன் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை, அவர் முழுப்படத்திற்கும் உறுதுணையாக இருந்தார். அன்பையும் நம்பிக்கையையும் பேச பணம் தேவைப்படுகிறது எப்படியாவது இப்படத்தில் பணத்தை சம்பாதித்து என் தயாரிப்பாளருக்கு தந்து விட வேண்டும். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன் நன்றி.
ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன், அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.
இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


