ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிப்பில் உருவாகியுள்ள ’29’ திரைப்படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ எனும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘மேயாதமான்’ , ‘ஆடை’,’ குலுகுலு ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ 29’ திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம்- கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் மே மாதம் எட்டாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் நான்கு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் … படத்தினை ரசிகர்களுக்கு பிரத்யேகமாக அறிமுகப்படுத்தும் வகையில் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ‘ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பி. எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி ,பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ் , ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் மகேந்திரன் பேசுகையில், ” எனக்கு இது ஒரு முக்கியமான மேடை. எனக்கு 29 வயது நடக்கும் போது தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார். அன்றுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ரத்னகுமார் என்னை அழைத்து ’29’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரத்னகுமார் அண்ணாவிற்கு நன்றி.
நான் சோர்வாக இருக்கும் தருணத்தில் யாராவது என்னை கை தூக்கி விட வேண்டும் என நினைப்பேன். பொதுவாக எல்லோருக்கும் எல்லாரும் இருப்பார்கள். ஆனால் நான் 35 ஆண்டு காலமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். சிலர் வருவார்கள். செல்வார்கள். கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள். சிலர் அழைத்துச் சென்று விட்டு விடுவார்கள். அது மிகவும் கடினமானதாக இருக்கும்.
நான் ஷான் ரோல்டனின் இசையில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டிருக்கிறேன். அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. அதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் நன்றி.
நான் நடிக்கும்போது பல தருணங்களில் எனக்கு தயக்கமாகவும் இருக்கும்… பயமாகவும் இருக்கும். நாம் ஒரு வகையில் நம்பிக்கையுடன் நடிப்போம். அதை எதிரில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாமல் இருக்கும். ஆனால் நான் என்னுடன் நடித்த சக நடிகரான விதுவை படத்தின் முதல் நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய நடிப்பை பார்க்கும் போதும்… அவருடன் இணைந்து நடிக்கும் போதும்.. எனக்கு எந்த தயக்கமும், பயமும் இருந்ததில்லை. எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர்.
நான் சிறிய வயதில் இருந்து நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அவர்களிடம் நான் என்னென்ன தகுதிகளை பார்த்தேனோ…! அவை எல்லாம் விதுவிடமும் இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்கிறார். இதற்காக அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பிலும் நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன். அவர்களிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறேன்”என்றார்.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், ” இங்கு திரையிடப்பட்ட குட்டி கிளிம்ப்ஸை பார்த்திருப்பீர்கள். இதில் சத்யாவையும் , விஜியையும் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் விஜி. இது ஒரு லவ் ஸ்டோரி. 29 வயதில் உள்ள சத்யா. 21 வயதான பெண் விஜி. இந்த வயது இடைவெளியை தெளிவாக சொல்லி இருக்கிறோம். ஏனெனில் 21 வயதான விஜி கேரக்டருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதில் கவனமாக உள்ள பெண். அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உள்ளது. ஆனால் சத்யாவிற்கு எந்த ஒரு நோக்கமும் இல்லை. அவருக்கு விஜி மட்டும்தான் அவருடைய வாழ்க்கையின் ஒரே நோக்கம்.
நம்முடைய வாழ்க்கையில் யாரேனும் ஒருவர் வந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அதே போல் சத்யாவின் வாழ்க்கையில் விஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்.
கண்டிப்பாக இந்த லவ் ஸ்டோரியை பார்க்கும் போது ரசிகர்கள் எளிதாக தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இந்தப் படம் சத்யா மற்றும் விஜியின் அழகான வாழ்க்கை பயணம். இந்த குட்டி கிளிம்ப்ஸ் .. வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ஐ குறிக்கிறது. இன்னும் இது போல் நிறைய உள்ளது. விரைவில் டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாக உள்ளது.
எனக்கு எப்போதும் இதை போல் அசலான உண்மையான இயற்கையான அடுத்த வீட்டு பெண் போன்று தோன்றும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவேன். கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும்… அதை திரையில் வெளிப்படுத்துவது கடினம். இது போன்றதொரு சவாலான கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி.
இந்தக் கதை 2010 ஆம் ஆண்டின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காதல் அப்பாவித்தனமாகவும்… இயல்பாகவும் ..நேர்மையானதாகவும்… இருக்கும். அதை நாங்கள் உணர்ந்தோம். அதனை படத்தை பார்க்கும் போது ரசிகர்களாகிய நீங்களும் உணர்வீர்கள்.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளாகட்டும் வசனங்களாகட்டும் எல்லாமே நன்றாக இருக்கும். ரசிகர்களை உணர்வுபூர்வமாக ஈர்க்கும். இது போன்றதொரு அழகான விஜி எனும் கேரக்டருக்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநர் ரத்ன குமாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும் என் மீது நம்பிக்கை வைத்து உற்சாகம் அளித்த இயக்குநருக்கு நன்றி ” என்றார்.
நடிகர் விது பேசுகையில், ” இந்த மேடை எனக்கு மிகவும் ஸ்பெஷலான மற்றும் தனித்துவமான மேடை. 13 வருடங்களுக்கு முன் கார்த்திகேயனை சந்தித்து அவரிடம் விவாதித்த ஒரு விசயம் இது. எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன் சினிமாவிற்கு வந்தேன். அப்போது பேசிய விசயங்கள் இப்போது நடந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். அதனால் படப்பிடிப்பு நிறைவடைந்த போது உண்மையில் உணர்வுபூர்வமாக கண்ணீர் சிந்தினோம்.
இந்த கதையில் சத்யாவாக நான் நடிக்க முடியும் என்று என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குநர் ரத்னா அண்ணாவிற்கு நன்றி. ரத்னாவிடம் ஒரு பேரன்பு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவரின் பேரன்பு உங்கள் அனைவரையும் வசப்படுத்தும். அவர் சொன்ன – சொல்லும் விசயம் அனைவரையும் சென்றடையும். இந்தப் படம் மிகவும் உயிர்ப்புள்ள படைப்பு. உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் இசை அற்புதமான மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறது. அவருடைய பாடல்களும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு ஜீவன். நான் ஒரு படத்தில் முதல் முதலாக ஹீரோவாக நடிக்கும் போது இப்படி ஒரு இசை அமைந்ததை ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான மாதேஷ் மாணிக்கத்திடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
ப்ரீத்தி அஸ்ராணி இல்லாமல் இந்த படத்தின் பணிகள் நடைபெற்றிருக்காது. அவர் அந்த விஜி கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் பொருந்தி இருந்தார். அவரைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்து பார்க்க முடியாது. ’29’ திரைப்படம் மே 8 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இந்த படத்தின் நோக்கம் என்ன? இந்த படத்தை உருவாக்கி இருப்பதன் பின்னணி என்ன? என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
நான் நிறைய லவ் படங்களில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் . இதனை மாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தபோது… இயக்குநர் ரத்னகுமார் என்னை சந்தித்தார். ஏதாவது வித்தியாசமானதாக தனித்துவமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அவர் கதை சொன்னார் நான் இதுவரை கேட்ட கதைகளிலேயே என்னை அதிகம் பாதித்த கதை இது . நான் நிறைய லவ் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இருந்தாலும் இந்தப் படத்தின் கதை எனக்குள் வறண்டு போயிருந்த காதல் உணர்வை மீட்டது. அதனால் அவருக்கு முதலில் ஒரு நன்றி.
29 திரைப்படம் முழுவதும் ரத்ன குமாரின் உலகம். இந்தப் படத்தில் ஒரு பங்காக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

