வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சாராமூடு, ப்ரித்வி பாண்டியராஜன் , ஸ்ரீ ஜா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கர ’.
16 வயதில் நாயகன் தனுஷ் அப்பா கே எஸ் ரவிக்குமார் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடி விடுகிறார். திருட்டு வேலை செய்து வருகிறார். நாயகி மமிதா பைஜூவை காதலிக்கும் தனுஷ் அவரை திருமணம் செய்வதற்காக கடைசியாக ஒரு திருட்டு வேலையை செய்ய நினைக்கிறார்.
திருவெறும்பூரில் இருக்கும் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க நாயகன் தனுஷ் மற்றும் பிரித்வி இருவரும் செல்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக தனுஷ் மாட்டிக் கொள்ள, பிரித்வி பாண்டியராஜ் தப்பிச்ச செல்கிறார்.
உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுராஜ், தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனுஷை பல பொய்யான வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார். இதையடுத்து தனுஷ், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து செல்கிறார்.
6 மாதங்களுக்குப் பிறகு ரேணிகுண்டாவில் திருட்டு வேலையை விட்டு, மனைவி மமிதா பைஜூ உடன் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். மனைவி கஷ்டப்படுவதை பார்த்து
சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து தனது அப்பாவை பார்பபதற்காக இராமநாதபுரத்திற்கு செல்கிறார்.
அங்கு அப்பாவை கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்து நிலத்தை விற்று பணம் தருமாறு கேட்கிறார். நிலம், வங்கியில் அடமானத்தில் இருப்பதாக அப்பா சொல்ல தனுஷ் அதிர்ச்சி அடைகிறார். இதே சமயம் வங்கி கடனை கட்டாததால் ஜப்தி செய்ய நோட்டீஸ் வருகிறது. இதனால் கே.எஸ்.ரவிக்குமார் இறந்து விடுகிறார்.
இதனையடுத்து அப்பா கே.எஸ்.ரவிக்குமார் பிணத்தை அவர்களுடைய நிலத்தில் அடக்கம் செய்ய தனுஷ் நினைக்கிறார். ஆனால் வங்கி அதிகாரிகள் அடக்கம் செய்ய கூடாது என்று சொல்கிறார்கள். இந்நிலையில் நிலத்தை மீட்டு தந்தையின் உடலை அடக்கம் செய்ய கடன் கொடுத்த கிளைகள் வங்கியிலே கொள்ளை அடிக்க தனுஷ் முடிவு செய்கிறார்.
இறுதியில் தனுஷ் வங்கியை கொள்ளையடித்தாரா ?இல்லையா? அப்பா உடலை அடக்கம் செய்தாரா? இல்லையா? போலீஸ் உயரதிகாரி சுராஜ், தனுஷை கைது செய்தாரா ? இல்லையா ? என்பதே ‘கர ’ படத்தின் மீதிக்கதை.
கரசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். காதல், கடமை, பாசம், பதற்றம்,கோபம் என அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
தனுஷ் மனைவியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ கிராமத்து பெண்ணாக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். போலீஸ் சுராஜ் பார்வையாலே மிரட்டுகிறார். மண்டல வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் ஜெயராம் சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.
தனுஷ் அப்பாவாக் நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அனுபவ நடிப்பு கைக்கொடுத்திருக்கிறது. அவரது மனைவியாக வரும் ஸ்ரீ ஜா ரவி, மாமாவாக வரும் கருணாஸ் , ப்ரித்வி பாண்டியராஜன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு அழகாக உள்ளது.
வங்கிகளால் பொது மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை மைய கருவாக வைத்து ஒரு விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா இத்திரைப்படத்தில் அப்பா – மகன் பாசம், கணவன் -மனைவி உறவு, பூர்வீக நிலம் என அனைத்தையும் பற்றி இத்திரைப்படம் பேசியிருக்கிறது. வங்கிகளில் வாங்கிய பணத்திற்கு அப்பாவி மக்கள் பணம் கட்டமுடியாமல் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ‘கர ’ – ஜென்டில்மேன்
மதிப்பீடு : 4.5/5
நடிகர்கள் : தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சாராமூடு, ப்ரித்வி பாண்டியராஜன் இசை : ஜிவி பிரகாஷ்குமார்
இயக்கம் : விக்னேஷ் ராஜா
மக்கள் தொடர்பு : சதீஷ் & சிவா (AIM ), ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்
