வாழ்க்கை என்பது வெறும் நாட்களின் தொகுப்பு அல்ல. நாம் உருவாக்கும் சாதனைகளின் வரலாறாகும். அந்த வரலாற்றை தனது உழைப்பாலும், விடாமுயற்சியாலும், மன உறுதியாலும் எழுதி காட்டியவர் தான் டாக்டர் எம்.ஆர். சௌந்தரராஜன்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மண்ணில் பிறந்து உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்திய இவரின் வாழ்க்கைப் பயணம். இன்றைய தலைமுறைக்கு ஒரு உண்மையான உத்வேகக் கதையாக திகழ்கிறது.
சாதாரண கிராமத்து இளைஞராக தொடங்கிய இவர் இன்று பல்வேறு விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த ஒரு பன்முக திறமையாளராக உயர்ந்திருக்கிறார்.
1973 ஆம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி ஆவரைக்குளம் அருகிலுள்ள மாட நாடார் குடியிருப்பு என்ற கிராமத்தில் செல்வக்கனி – ராஜய்யா நாடார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே கல்வியிலும், விளையாட்டிலும் அசாதாரண ஆர்வம் கொண்டிருந்த இவர் .பின்னர் சென்னையில் முதுகலைப் பட்டமான M.A. Public Administration படிப்பை முடித்தார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்ற இவர். புத்தக வாசிப்பு, மேடைப் பேச்சு, சாகசப் பயணங்கள் போன்றவற்றிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
1990 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. அந்த ஒரே ஆண்டில் தேசிய அளவில் பல பதக்கங்களை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். குஜராத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினார். குண்டு எறிதல் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் பெற்று தனது திறமையை நிரூபித்தார். அதுமட்டுமல்லாமல், மாநில அளவிலான 800 மீட்டர் சைக்கிள் போட்டியில் நான்கு முறை வெள்ளிப் பதக்கம் வென்று பல்துறை விளையாட்டு வீரராக திகழ்ந்தார்.
இந்திய அளவிலான சாதனைகளில் மட்டும் நின்றுவிடாமல் சர்வதேச அரங்கிலும் இந்தியக் கொடியை உயர்த்தினார். பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று உலகின் கவனத்தை ஈர்த்தார். மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் 23 கி.மீ பிரிவில் சிறப்பு சாம்பியன் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
இவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது அவரது சாதனைப் பயணங்கள். தமிழ்நாடு முழுவதும் 2850 கி.மீ தூரத்தை வெறும் 140 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து கின்னஸ் சாதனை படைத்தார். இந்த அசாதாரண முயற்சிக்காக Guinness World Records பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதன்பிறகு யமஹா மோட்டார் சைக்கிளில் 26,750 கி.மீ தூரத்தை வெறும் 19 நாட்களில் இந்தியா முழுவதும் சுற்றிப் பயணம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
சமூகப் பொறுப்புணர்வும் இவரது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 25 கல்லூரி மாணவர்களை வழிநடத்தி சென்னையிலிருந்து டெல்லி வரை பயணம் மேற்கொண்டார். அப்போது சோனியா காந்தியை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் பெற்றார். விளையாட்டு என்பது வெறும் பதக்கங்களுக்காக மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் எப்போதும் இருந்தது.
இவரது வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் எட்டு வயதில் ஏற்பட்ட ஒரு கடுமையான விபத்தில் செயற்கைக் காலுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த உடல் குறைபாடு அவரது மன உறுதியை ஒருபோதும் பாதிக்கவில்லை. செயற்கைக் காலுடன் இருந்தபடியே சைக்கிள், கார், மோட்டார் பைக் உள்ளிட்ட அனைத்திலும் அபார திறமை பெற்று சாதனை படைத்தார். “உடலில் குறை இருக்கலாம். மனதில் குறை இருக்கக் கூடாது” என்பதற்கே இவர் ஒரு உயிருடன் நிற்கும் உதாரணம்.
இன்று தமிழக விளையாட்டு துறையை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் ஏழை, எளிய விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்களை தேசிய மற்றும் ஒலிம்பிக் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய நோக்கம். அதற்காக விளையாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இளம் வயது முதல்வருடன் தொடர்பு கொண்டு தனது கனவுகளை செயல்படுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஒரு கிராமத்தில் பிறந்த மனிதன் உலக சாதனைகள் படைத்து சமூகத்திற்காக கனவு காணும் நிலைக்கு உயர்ந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. அது விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் வெற்றி. டாக்டர் எம்.ஆர். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு “சூழ்நிலை அல்ல. மன உறுதியே மனிதனை உயர்த்துகிறது” என்ற மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது. அவரது பயணம் இன்னும் தொடர்கிறது. அந்த பயணம் இன்னும் பல ஆயிரம் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையும் உறுதியாக உள்ளது.


