சிவன் பிக்சர்ஸ், எஸ் ஸ்டியோஸ் – பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.எம்.ஆதீஷ்வர் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் பிரசாந்த் பாண்டியராஜ், நர்மிதா.எம்.வி, சாயா தேவி, அருள்ஜோதி, பாலாஜி சக்திவேல், கெளசல்யா, அருள்தாஸ், மீனா, ஹெலோ கந்தசாமி ஆகியோர் நடிப்பில் ’வாரண்ட்’ ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
திருச்சியில் ஒய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி சக்திவேல் இவரது ஒரே மகனான பிரசாந்த் பாண்டியராஜை அரசு வேலையில் சேர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அதற்காக பல அரசு தேர்வுகளை மகனை எழுத சொல்கிறார். ஆனால் எந்த தேர்விலும் பிரசாந்த் தேர்ச்சி பெறாத நிலையில் தாய்மாமா காளி வெங்கட் முயற்சியில் போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறார்.
திருச்சியில் உள்ள பொன்மலைக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பிரசாந்த் பணியில் சேர்கிறார். தொடக்கத்தில் பிரசாந்திடம் சிறு சிறு வேலைகள் கொடுக்கப்படும் போது அதை சரிவர செய்யாமல் இருக்கிறார்.
இந்நிலையில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்படும் திருடன் ஒருவனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அந்த திருடன் பிரசாந்திடம் இருந்து தப்பிச் செல்கிறார். இதில் அவமானப்படும பிரசாந்த் மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிறார்.
ஒரு கட்டத்தில் காவல்துறை வேலையே வேண்டாம் என்று முடிவு எடுக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் அப்பாவின் அறிவுரையை ஏற்று நிலுவையில் இருக்கும் முடிக்க முடியாத வாரண்ட் வழக்குகளை கையில் எடுப்பவர் அதில் வெற்றி பெறுவதோடு தான் யார்? என்பதை நிரூபிக்கிறார்.
இதனால் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் இவரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். இந்நிலையில் போதை பொருள் வழக்கில் கைதாகும் சில மாணவர்களை பிரசாந்த் கடுமையாக அடித்து விடுகிறார். இதே சமயம் பிரசாந்திடம் இருந்து தப்பிச் சென்ற திருடனை பிடிக்க முயற்சியில் இறங்குகிறார்.
இதே வேளையில் பிரசாந்த் அடித்த மாணவன் இறந்து விடுகிறார். இதனால் பிரசாந்த் அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் பிரசாந்த் மாணவன் கொலை வழக்கில் இருந்து வெளியே வந்தாரா? இல்லையா? தேடி சென்ற திருடனை பிடித்தாரா ? இல்லையா? என்பதே ’வாரண்ட்’ வெப் சீரிஸின் மீதிக்கதை.
கோட்டை கருப்பு சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ் அப்பாவி இளைஞராக அமைதியான குணம் கொண்ட வெள்ளந்தி மனிதராக வாழ்ந்திருக்கிறார். இவரது நடிப்பு சில இடங்களில் ரசிக்கவும் பல இடங்களில் சிரிக்கவும் முடிகிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் முடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
நர்ஸாக நடித்திருக்கும் நர்மிதா.எம்.வி, விலைமாதுவாக நடித்திருக்கும் சாயா தேவி , அருள்ஜோதி, ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
பிரசாந்த் பாண்டியராஜின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், அம்மாவாக நடித்திருக்கும் கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள்தாஸ் நடிப்பு கவனிக்கும் வகையில் இருக்கிறது. தாய்மாமாவாக வரும் காளிவெங்கட் , காவலராக நடித்திருக்கும் ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரின் நடிப்பு ரசிக்கும் வகையில் இருந்தது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக உள்ளது . அசோக் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது நிகழும் மரணத்தை மைய கருவாக வைத்து இத்திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இத்திரைக்கதையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்போடு கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் ’வாரண்ட்’ காவலர் எதிர் கொள்ளும் சவால்கள்
மதிப்பீடு : 4.2/5
நடிகர்கள் : பிரசாந்த் பாண்டியராஜ், நர்மிதா.எம்.வி, சாயா தேவி, அருள்ஜோதி, பாலாஜி சக்திவேல், கெளசல்யா, அருள்தாஸ், மீனா, ஹெலோ கந்தசாமி
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : அசோக் குமார்
இயக்கம் : விக்னேஷ் நடராஜன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
