லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் இயக்குநர் கிட்டு இயக்கத்தில் அபி நக்ஷத்ரா, இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிசாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆட்டி’ .
1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மதுரையில் இன்ஸ்பெக்டராக இசக்கி கார்வண்ணன் குற்றவாளி ஒருவரை என்கவுன்டர் செய்ய செங்காடு என்ற காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறார். புதிய காவல் நிலையத்திற்கு செல்லும் இசக்கி கார்வண்ணன் அங்கு எந்த ஒரு குற்றச் சம்பவங்களும் நடக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறார்.
இதே சமயம் அருகில் இருக்கும் மலைகிராம மக்கள் இங்கிருக்கும் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.இதே கிராமத்தில் வசிக்கும் அபி நக்ஷத்ரா அங்கிருக்கும் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கிறார்.
இந்நிலையில் அந்த கிராமத்திற்கு புதிதாக வரும் வாத்தியார் வந்த 4 நாட்களில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதனையடுத்து இசக்கி கார்வண்ணன் இந்த கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கிறது.
இறுதியில் வாத்தியாரை கொலை செய்தது யார் ? எதற்காக ? கொலைகாரன் யார் ? என்பதை இசக்கி கார்வண்ணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’ஆட்டி’ படத்தின் மீதிக்கதை.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் கொலைகாரனை கண்டுபிடிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்டுக்குரியது . யாருக்கும் அஞ்சாமல் நேர்மையான அதிகாரியாக துணிச்சலாக வலம் வருகிறார்.
கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறுவதற்காக துணை நிற்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
எப்போதும் தூங்கி வழியும் கதாபாத்திரத்தில் போலீசாக வரும் காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர், பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தீசனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. சிபி சதாசிவம் ஒளிப்பதிவு கதையோடு நம்மை பயணிக்கும் வகையில் இருக்கிறது.
பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிட்டு இத்திரைப்படத்தில் ஒரு கொலை அதை தொடர்ந்து நடக்கும் சில மர்மங்களை வைத்து ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’ஆட்டி’ – காக்கும் பெண் தெய்வங்கள்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : அபி நக்ஷத்ரா, இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார்
இசை : தீசன்
இயக்கம் : கிட்டு
மக்கள் தொடர்பு : ஆ .ஜான்
