கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘.
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது .
அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம் ‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் ட்ரெய்லர், பாடல்கள் திரையிடப்பட்டன. விழாவின் தொடக்கத்தில் ஷரண், கோபால், மனோஜ் என மூன்று தயாரிப்பாளர்கள் பேசினார்கள். தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,
“இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில் ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வது போல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக் கூடாது .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன .ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். உப்புமா படங்களால், தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு.திறமையான இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ”என்றார்.
இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது,
” நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் .ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது .எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன்” என்றார்.
தயாரிப்பாளர் கோபால் பேசும் போது,
“இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
இயக்குநர் மித்ரன் பேசும் போது ,
“இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களின் கடின உழைப்பு ட்ரெய்லரில் தெரிகிறது. சினிமாவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு சினிமா திருப்பிக் கொடுக்கும்.இது மாதிரி திரைப்படங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.
நடிகர் ரித்விகா பேசும்போது,
” இவ்வளவு தூரம் இந்தப் படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான் .ஆச்சரியமாக இருக்கிறது.
அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம். படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்து கொள்வதில் சிக்கல் வரும்.மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது.மழை வேண்டாம் என்றால் மழை வரும். எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார். அவர் இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பதற்கு மேனேஜர் வைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவரே எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு சிரமப்படக்கூடாது. கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி ,நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது,
” எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன். அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார் .அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும் .அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘திருமணம்’ தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு இரவு மூன்று நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால் கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்க வைப்பார் .எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன்.இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன் “என்றார்.
‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.




