நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக். தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்.
விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது,
” எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.
இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.
எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.
நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இந்தப் படத்தில் நடித்த சென்ட்ராயனுக்கு நன்றி.இந்தப் படத்தில் நான் அழுவது போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்து மைனா உங்களுக்கு ரொம்ப நன்றி. கதாநாயகி அனாமிகாவுக்கு நன்றி.
நான் 2016 லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை.எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.
இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் .நானும் பிரபு சாலமன் சாரும் ‘மேம்போ’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார்.
நான் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் இசையை அவரிடம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.கண்டிப்பாக நீங்கள் செய்து தர வேண்டும்.இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன்,
அதைச் செய்து கொடுத்து உதவினார்.ரொம்ப நன்றி சார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர்.நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்குக் கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன். நித்திலன் இங்கே வந்ததற்கு ரொம்ப நன்றி.பாடல் எழுதியிருக்கும் கார்த்திக் நேத்தா சாருக்கும் நன்றி. மேலும் இங்கே வந்துள்ள மதன் சார், ரமேஷ் சார், சௌந்தர்யா எல்லாருக்கும் ரொம்ப நன்றி. கேமராமேன் பிரதீப்,உதவி இயக்குநர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.
விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மேலும் விழாவில்சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான் ,படத்தின் இயக்குநர் ரா.ராஜ்மோகன், இசையமைப்பாளர் இமான்,ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜா, கதாநாயகி அனாமிகா,மைனா நந்தினி, அருள்தாஸ், காளி வெங்கட், லெனின் பாரதி,சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவின் நிறைவில் ட்ரெய்லர் பாடல்கள் வெளியிடப்பட்டன. 300 ஆவது படத்தை முன்னிட்டு நாயகன் யோகிபாபுவுக்குத் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்தார். அத்துடன் விழாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.
யோகி பாபுவின் 300 வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளிவர இருக்கிறது.





