ஸினிமா மீடியா அன்ட் என்டர்டைன்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் , கிரியேட்டிவ் என்டர்டைன்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் , நாக துர்கா, செல்வராகவன், கே எஸ் ரவிக்குமார் , வனிதா விஜயகுமார் , ஐஸ்வர்யா, ரம்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’லவ் ஓ லவ்’ (Love Oh Love) .
வேலைக்காக துபாய் செல்ல தயாராக இருக்கும் நாயகன் பவிஷ், நாக துர்காவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கு வரும் மாதர் சங்கத் தலைவியான வனிதா, பவிஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போராட்டம் நடத்துகிறார். இதனையடுத்து, இன்ஸ்பெக்டரான செல்வராகவனிடம் பவிஷ் தனது காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார்.
நாக துர்காவை முதன்முதலில் பார்த்தவுடனே பவிஷ் காதலில் விழுகிறார். அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அளவுக்கு அவளை ஆழமாக நேசிக்கிறார். ஆனால் நாக துர்காவின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் பவிஷின் பொருளாதார நிலையை மீறியதாக இருக்கின்றன.
காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், தனது வசதிக்கு மீறி செலவு செய்யத் தொடங்குகிறார் பவிஷ். கையில் பணம் இல்லாத நிலையிலும் கடன் வாங்கி அவளுக்காக செலவு செய்கிறார். காதலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த இந்த முடிவுகள், நாளடைவில் அவரை பெரும் கடன் சுமையில் சிக்க வைக்கின்றன.
ஒரு கட்டத்தில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாக துர்கா பவிஷிடம் கூறுகிறார். காதலியை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பவிஷும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் நாக துர்காவின் அம்மா எதிர்பாராத விதமாக குறுக்கிடுகிறார். பவிஷின் கடன் நிலைமையை அறிந்த அவர், “இவ்வளவு கடனில் இருக்கும் ஒருவரால் என் மகளை எப்படி நன்றாக பார்த்துக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்த விவகாரம் பெரிதாகி காவல் நிலையம் வரை செல்கிறது. அங்கு அனைவரின் முன்னிலையிலும் பவிஷின் தந்தையான கே. எஸ். ரவிகுமார் அவமானப்படுத்தப்படுகிறார். காதலுக்காக பவிஷ் எடுத்த முடிவுகளும், வாங்கிய கடன்களும் குடும்பத்தின் மரியாதையையே பாதிக்கும் சூழ்நிலையாக மாறுகிறது.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த கே. எஸ். ரவிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பவிஷ் மீது கடும் கோபம் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகும் நிலைக்கும் செல்கிறார்கள். இதற்கிடையில், பவிஷ் தனது வேலையையும் இழக்கிறார்.
காதலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த ஒவ்வொரு முடிவும், அவரது வாழ்க்கையில் இருந்த சந்தோஷம், நிம்மதி, குடும்ப உறவு என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக பறித்துச் செல்கிறது.
இப்போது தனது வாழ்க்கையை மீண்டும் எப்படி கட்டியெழுப்பப் போகிறார் பவிஷ்? குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா? துபாய்க்கு வேலைக்காக சென்றாரா? பவிஷ் மற்றும் நாக துர்காவின் காதல் திருமணத்தில் முடிந்ததா? அல்லது பிரிவில் முடிந்ததா? என்பதே ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் பவிஷ், காதலுக்காக எதையும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இது அவரது இரண்டாவது படம் என்பதால், நடிப்பில் மேலும் முதிர்ச்சி தெரிகிறது. சில காட்சிகளில் அவரது நடிப்பில் தனுஷின் தாக்கமும் சாயலும் தென்படுகிறது. குறிப்பாக, காதலால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் வலி, ஏமாற்றம், குழப்பம் மற்றும் உணர்வுப் போராட்டங்களை சிறப்பாக வெளிப்படுத்தி, அந்த கதாபாத்திரமாகவே மாறி நிற்கிறார் பவிஷ்.
நாயகியாக நடித்திருக்கும் நாக துர்கா, அறிமுக படம் போல தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு, அழகும் துடிப்பும் கலந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என படம் முழுவதும் உற்சாகமான தோற்றத்தில் வலம் வரும் நாக துர்கா, ஒரு அழகு தேவதையாக ரசிகர்களை கவர்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே. எஸ். ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன், மகளிர் சங்கத் தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் பாக்ஸனின் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, பாடல்களின் இசை படத்தின் கொண்டாட்டமான தருணங்களுக்கு சிறப்பு சேர்க்கிறது. பின்னணி இசையும் கதையோடு பயணிக்கும் வகையில் அமைந்து, காட்சிகளின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு அழகூட்டி, கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.
காதலுக்காக அளவுக்கு மீறி கடன் வாங்குவதால் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மையக் கருவாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன். இத்திரைப்படம், ஒரு உறவில் ஒருவர் மற்றொருவரை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும், ஆடம்பர வாழ்க்கை முறையால் ஏற்படும் இழப்புகளையும் அழுத்தமாக பதிவு செய்கிறது.
மொத்தத்தில் ’லவ் ஓ லவ்’ (Love Oh Love) – வாழ்க்கை புரிதல்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : பவிஷ் , நாக துர்கா, செல்வராகவன், கே எஸ் ரவிக்குமார் , வனிதா விஜயகுமார் , ஐஸ்வர்யா, ரம்யா
இசை : பாக்ஸன்
இயக்கம் : மகேஷ் ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு : ரேகா
