பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் சார்பில் சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி தயாரிப்பில் இயக்குநர் நிஸாம் பஷீர் இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான், அசோகன் ,
விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன், நக்ஷத்ரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஐ , நோபடி’ (I,Nobody)
வஞ்சியூரில் உள்ள ஒரு வங்கியில் மூன்று பேர் துணிகரமாக கொள்ளையடிக்கிறார்கள். அப்போது வங்கியில் இருந்த பிரித்விராஜ் சுகுமாரனை முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். பின்னர், ஒரு இடத்தில் அவரை இறக்கிவிடும் போது, கொள்ளையர்களில் ஒருவரின் முக்கியமான அடையாள அட்டை எதிர்பாராத விதமாக பிரித்விராஜின் கையில் சிக்குகிறது.
இதே சமயம், எதிர்பாராத விதமாக நிகழும் விபத்தில் அந்த மூன்று கொள்ளையர்களும் உயிரிழக்கிறார்கள். பிரித்விராஜின் கையில் சிக்கிய அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, கொள்ளையர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டதால், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகிறார்கள்.
இந்நிலையில் இந்த வங்கியில் பிரித்விராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் எந்த விதமான சேமிப்பு கணக்கு இல்லாமல் இருக்கிறது. பிரித்விராஜ் அங்கு நீண்ட நேரமாக இருந்தது சந்தேகத்தை அதிகரிக்கிறது. இதனால், அந்த கொள்ளைச் சம்பவத்தில் பிரித்விராஜுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதத் தொடங்குகிறார்கள்.
இதற்கிடையே, போலீசாரின் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிடுகின்றன. இதன் விளைவாக, பிரித்விராஜுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. அந்தச் சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக பிரித்விராஜ் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் எதிர்பாராத விதமாக புதிய பிரச்சினைகளை உருவாக்கி, அவரை மேலும் சிக்கலான சூழ்நிலைக்குள் தள்ளுகிறது.
இறுதியில், இந்தப் பிரச்சினைகளில் இருந்து பிரித்விராஜ் மீண்டு வந்தாரா? வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டு காணாமல் போன பணம் மீட்கப்பட்டதா? சம்பந்தமே இல்லாத அந்த வங்கிக்கு அவர் சென்றதற்கான உண்மையான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்களை விறுவிறுப்பாகச் சொல்லும் திரைப்படமே ‘ஐ, நோபடி’ (I, Nobody) படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்ப காட்சிலேயே துப்பாக்கியுடன் வங்கியில் நுழையும் போதும் சரி , குற்றவாளியின் ஒருவருடைய அடையாளத்தை எடுக்கும் போதும் சரி, காணாமல் போன பணத்தை கண்டுபிடிக்கும் போதும் சரி ஒரு சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக படத்தில் இறுதிக்காட்சியில் பேருந்து மற்றும் ஷாப்பிங் மாலில் நடக்கும் அதிரடி சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து, இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, காணாமல் போன தனது மூத்த மகளை மீட்பதற்காக தெருக்களில் இறங்கி பரிதவித்துப் போராடும் காட்சிகளில் அவரது உணர்வுபூர்வமான நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது. ஒரு தாயின் பதற்றம், வலி, தவிப்பு ஆகியவற்றை மிகுந்த நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தி, அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
காவல் அதிகாரியாக நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகான், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைத் தேடும் விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் அளவான மற்றும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பியாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன்,வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்கும், திரில்லர் தன்மைக்கும் பக்கபலமாக அமைந்துள்ளன. குறிப்பாக, பதற்றமான காட்சிகளில் அவரது பின்னணி இசை கதை நகர்வை மேலும் விறுவிறுப்பாக்குகிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தையும், காட்சிகளின் தீவிரத்தையும் சிறப்பாக பதிவு செய்து, பார்வையாளர்களுக்கு வலுவான திரை அனுபவத்தை வழங்குகிறது.
வங்கி கொள்ளை சம்பவத்தை மையக் கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் நிஸாம் பஷீர், வழக்கமான கொள்ளைக் கதையாக இல்லாமல், கொள்ளையடித்தவர்களைத் தாண்டி அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு மனிதன் அந்தச் சிக்கலில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து மீள்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக்கியிருக்கிறார்.
பிரித்விராஜின் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலையும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் நொடிக்கு நொடி விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. யாராலும் எளிதில் கணிக்க முடியாத திருப்பங்களுடன் கதையை கொண்டு சென்று, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பை தக்க வைத்திருக்கும் இயக்குநர் நிஸாம் பஷீரின் திரைக்கதை அணுகுமுறை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ’ஐ , நோபடி’ (I,Nobody) – தனி மனித போராட்டம்
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான்,
இசை : ஜேக்ஸ் பிஜாயின்
இயக்கம் : நிஸாம் பஷீர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
