மைசூர் அரண்மனையின் இருண்ட மூலை ஒன்றில், RAW அமைப்பால் தேடப்பட்டு வந்த அச்யுத் குமார் தலைமறைவாக ஒளிந்திருந்தார். அவரை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பது RAW சிறப்பு குழுவின் தலைமை அதிகாரியான ஆசிஷ் வித்யார்த்தியின் உத்தரவு. ஆனால், சிறப்பு குழுவிற்கு முன்பாகவே அச்யுத் குமாரைப் பிடித்து, RAW-ன் DAS பிரிவில் இயங்கும் தனக்குரிய திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியோடு களத்தில் இறங்கினான் இளம் அதிகாரி கார்த்தி.
அச்யுத் குமார் இருக்கும் இடத்தை கார்த்தி நெருங்கிய அதே கணத்தில், ஆஷிகா ரங்கநாத் அவரை ரகசியமாகச் சந்திக்க வந்தார். அங்கு ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. அச்யுத் குமார் ஒரு கத்தி வடிவ சாவியை ஆஷிகாவிடம் கொடுக்க முயன்றார். ஆனால், அடுத்த நொடியே அந்த இடத்தை சர்வதேச கூலிப்படை சூழ்ந்தது. கொடூரமான தாக்குதலில் அச்யுத் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கூலிப்படையினர் அந்தச் சாவியைக் கைப்பற்ற முயன்றபோது, கார்த்தி சாகசமாகப் போராடி அதைத் தன் வசப்படுத்தினான்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அச்யுத் குமார், இறப்பதற்கு முன் கார்த்தியின் காதில் இரு பேரதிர்ச்சி தரும் உண்மைகளை உடைத்தார். ஒன்று, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட கார்த்தியின் தந்தை (சர்தார்) இன்னும் உயிருடன் இருக்கிறார். இரண்டாவது, சர்வதேச கூலிப்படைத் தலைவனான எஸ்.ஜே.சூர்யா, நாட்டையே அழிக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பேரழிவிற்குத் திட்டம் தீட்டியிருக்கிறான்.
அந்த கத்தி வடிவ சாவி மட்டுமே நாட்டின் பாதுகாப்பிற்குரிய ஒரே கதவு அல்ல; அதைப்போல மேலும் இரண்டு சாவிகள் ரகசியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என்பதையும், அந்த மூன்று சாவிகளையும் கைப்பற்றி நாட்டைச் சுடுகாடாக்க எஸ்.ஜே.சூர்யா துடிப்பதையும் கார்த்தி புரிந்துகொண்டான்.
மீதி இரண்டு சாவிகளின் பின்னணியையும், தன் தந்தையின் தடத்தையும் தேடி ஓடிய மகன் கார்த்திக்கு, ஒரு ஆபத்தான சூழலில் அந்த ஆச்சரியம் காத்திருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு, தன் தந்தை சர்தார் கார்த்தியை நேருக்கு நேர் சந்தித்தான்.
நாட்டின் அழிவுக்கான கடிகார முள் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தனர். ஒரு பக்கம் வான்வழிச் சாகசங்களும், துடிதுடிப்பான ஆக்ஷனுமாக மகன் கார்த்தி பாய, மறுபக்கம் அனுபவமும் அமைதியான ஆக்ஷனுமாக தந்தை சர்தார் வியூகம் அமைத்தார்.
நாட்டை அழிக்க நினைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் சதியை முறியடித்து, பேரழிவிலிருந்து மக்களை தந்தையும் மகனும் இணைந்து எப்படி மீட்கிறார்கள் என்பதை நோக்கி நகர்கிறது ‘சர்தார் 2’ கதையின் உச்சக்கட்ட ஆக்ஷன் களம்!
மொத்தத்தில் – அதிநவீன தொழில்நுட்பத்தில் அதிரடி ஆக்ஷன் கலந்த உளவுப்படம்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் :கார்த்தி , எஸ்.ஜே. சூர்யா,மாளவிகா மோகனன்,ஆஷிகா ரங்கநாத்,யோகி பாபு
இயக்குநர்: பி.எஸ். மித்ரன்
தயாரிப்பாளர்: எஸ். லட்சுமண்குமார் (பிரின்ஸ் பிக்சர்ஸ்)
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்
படத்தொகுப்பு: விஜய் வேலுக்குட்டி
மக்கள் தொடர்பு: சதீஷ்
